மராட்டியத்தில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர் தான் ஆட்சியில் இருப்பார், நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் : சிவசேனா எம். பி. சஞ்சய் ராவத் திட்டவட்டம்

மும்பை: மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதல்வராக இருப்பார் என்று சிவசேனாவின் மூத்த எம். பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்கிறது.

மூத்த எம்பி சஞ்சய் ராவத் பேட்டி

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா மூத்த எம்பி சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,  மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர்தான் ஆட்சியில் இருப்பார் என்றும் இரண்டரை ஆண்டுகள் சிவசேனா முதல்வர் இருப்பார் என்று செய்தி தவறானது என்றும் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், முதல்வர் இடையில் மாற்றப்பட மாட்டார். நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக பேசி உள்ளோம். சிவசேனா முதல்வர் இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படுவார். உத்தவ் தாக்கரேதான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்களின் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்.

பாஜகவுடன் நாங்கள் இனியும் இணைய முடியாது. அவர்களுக்கு நாங்கள் கொடுத்த அவகாசமும் முடிந்துவிட்டது. ஆளுநரை வைத்து அவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்த போதே அவர்களுடனான எண்களின் உறவு முறிந்துவிட்டது.பாஜக எங்களுக்கு இந்திரனின் இருக்கையை கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்கள் இப்போது எங்களுடன் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் மிகவும் தாமதமாக இந்த முடிவுறு வந்துள்ளனர். அவர்கள் தவறு செய்துவிட்டனர் என்று சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

மராட்டியத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம்

*மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது.

*இதனிடையே டிசம்பர் 1ம் தேதிக்குள் ஆட்சியமைப்போம் என சிவசேனா தலைவர்கள் கூறிவரும் நிலையில் மும்பையில் நேற்று இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்த சிவசேனா தலைவர்கள் சந்தித்தனர்.

*மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா தலைவர்கள் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நள்ளிரவில் ஆலோசனை நடத்தினார்.

*இந்த ஆலோசனையின் முடிவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், சிவசேனாவுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

*இதனிடையே ஆட்சி அமைப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக முடிவு செய்த பின் குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் அதிகார பகிர்வு குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரித்வி ராஜ் சவான் தெரிவித்துள்ளார்.

Related Stories: