×

தென்றல் தவழும் பூமியாக திகழும் தென்காசி மாவட்டத்தின் வளங்களும் வாழ்வாதாரமும்..

தென்காசி : புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் முக்கிய அம்சங்களை இந்த செய்தித் தொகுதிப்பில் காணலாம்.

*ஐவகை நிலமுடைய மாவட்டம் என்ற பெருமையை பெற்ற நெல்லையில் இருந்து பிறந்திருக்கிறது தென்காசி மாவட்டம்.

*எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி தெற்கே ஆழ்வார்குறிச்சி முதல் வடக்கே சிவகிரி வரை பரந்து விரிந்திருப்பது தென்காசி மாவட்டம்...

*மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தென்றல் தவழும் பூமியாக திகழும் இம்மாவட்டத்தின் முக்கிய அடையாளம் குற்றாலம்.

*மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகும் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரும்,குண்டாறு நதி,ஹரிஹர நதி,சிற்றாறு, ஆகிய நதிகளின் நீர் தாமிரபரணியில் சென்று கலக்கிறது.

*சாரலுக்கு பெயர் போன இங்கு அருவிகளுக்கும் ஆனந்த குளியலுக்கு பஞ்சமில்லை. மக்களின் தாகம் தீர்க்கவும் விவசாய நிலங்களை செழிக்க செய்யவும்  ராமநதி, கடனாநதி, குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி,ஆகிய பெரிய நீர்த்தேக்கங்களும், மோட்டை, ஸ்ரீமூலப் பேரி ஆகிய இரு சிறிய நீர்த்தேக்கங்களும் உள்ளன.

*கரிசல் மண்ணை அதிகம் கொண்ட தென்காசி மாவட்டத்தில் நெல் தவிர தென்னை, வாழை, பருத்தி, காய்கறிகள் ஆகியவை முக்கிய விளைப் பொருட்கள் ஆகும்.

*பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை ,கடையநல்லூர் ஆகிய இடங்களில் இருந்துதான் கேரள மாநிலத்திற்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

*தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர் ஆலயம் ,இலஞ்சி குமரன் ஆலயம், புளியரை தஷ்ணாமூர்த்தி ஆலயம், பண்பொழி திருமலை முருகன் ஆலயம், இலத்தூர் சனி பகவான் ஆலயம்,சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவில் ஆலயம் ஆகியவற்றுடன் பொட்டல்புதூர் பள்ளிவாசல், புனித மிக்கேல் அதிதூதர் சின்னப்பர் ஆலையம் ஆகியவை அமைந்திருப்பது இந்த மாவட்டத்தில்தான்....

*பூலித்தேவன், வீர வாஞ்சிநாதன் போன்ற வரலாற்றில் இடம்பிடித்த பலரை அளித்ததும் இதே தென்காசி மாவட்டம்தான்.

*தமிழக-கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியாக செங்கோட்டை புளியரை அருகில் உள்ள கோட்டை வாசல் விளங்குகிறது. பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாவிட்டாலும் விவசாயம் செழித்து காணப்படுகிறது.

*புதிய மாவட்டம் உருவாகியுள்ளதன் மூலம் தென்காசி மக்களின் 36 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியுள்ளது. செழுமையான விவசாய பூமியாக உள்ள இப்பகுதி, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் வளம் பெற வேண்டும் என்பதே தென்காசி மக்களின் எதிர்பார்ப்பு...

Tags : Tenkasi ,district , Courtallam, coconut plant, factories, products
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து