வேடசந்தூர் அருகே சோகம் ஜல்லிக்கட்டு காளை குத்தி உரிமையாளர் குடல் சரிந்தது

*கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை

வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே ஜல்லிக்கட்டு காளை குத்தியதில் உரிமையாளர் குடல் சரிந்தது. அவர் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யர்மடத்தை சேர்ந்தவர் மணிவேல் (50). இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இந்த காளை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்குச் சென்று வெற்றி பெற்று வந்துள்ளது. காளையை மேய்ச்சலுக்கு நேற்று காலை கொண்டு சென்றார். பின்னர் வயல் பகுதியில் கட்டியபோது, திடீரென மணிவேலை காளை முட்டித்தள்ளியது. இதில் மணிவேல் இடதுபுறம் குடல் முழுமையாக வெளியே வந்தது.

 அப்போது காளையின் கழுத்தில் இருந்த கயிறு மணிவேலின் கால்களில் சிக்கிக்கொண்டது. இதனால் மணிவேல் குடல் வெளியே வந்த நிலையில் காளையின் அருகிலேயே படுத்துக் கொண்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காளையிடம் செல்ல பயந்து, மணிவேலை மீட்க அவரது மகன் பூபதிக்கு தகவல் கொடுத்தனர். கல்லூரி சென்றிருந்த பூபதி வந்து காளையிடம் சிக்கியிருந்த மணிவேலை மீட்டு ஆட்டோவில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அங்கிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கு முன் இதே காளை, பூபதியை முட்டியுள்ளது. அவர் அப்போது சிகிச்சை பெற்று திரும்பினார். இதனால் உறவினர்கள் காளையை விற்குமாறு கூறியுள்ளனர். பாசமாக வளர்த்த காளையை விற்க மனமின்றி வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: