×

பட்டாசு வழக்கு 26ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பட்டாசு தொடர்பான வழக்கை வரும் 26ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நேற்று உறுதி அளித்துள்ளது. நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய மாற்றங்களை செய்து கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் குறிப்பாக பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

ஆனால், இதையடுத்து பேரியம் ரசாயனம் இல்லாமல் பட்டாசு தயாரிக்கவே முடியாது என பெசோ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், “பசுமை பட்டாசு என்றால் என்ன?, அதற்கான வரையறை என்ன?, மேலும் பேரியம் மற்றும் பொட்டாசியம் இல்லாமல் எப்படி அதனை தயாரிப்பது?, இந்த விவகாரத்தில் பெசோ மற்றும் நீரி அமைப்பால் தயாரிக்கப்படும் பட்டாசை முழுமையான சோதனைக்கு உட்படுத்தி பின்னர் அது தொடர்பான புதிய விதிமுறை மற்றும் வரையறைகளை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தின் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை கடந்த அகடோபர் 5ம் தேதி மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து தீபாவளி பண்டிகையின் போது சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமை பட்டாசு விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், “பட்டாசு தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குறிப்பாக இந்த வழக்கை பொருத்தமட்டில் ஏற்கனவே விசாரித்தபோது ஒரு இடைக்கால உத்தரவு மட்டும் தான் வழங்கப்பட்டது. அதனால் கிடப்பில் இருக்கும் பட்டாசு தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு வழக்கை வரும் 26ம் தேதி விசாரிப்பதாக உறுதியளித்தனர். இதில் பட்டாசு உற்பத்தியாளர்களின் மேற்கண்ட கோரிக்கைக்கு தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Supreme Court ,26th Supreme Court , Supreme Court , fireworks
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...