×

மகாராஷ்டிராவில் இழுபறி முடிவுக்கு வந்தது சிவசேனா, தே.காங், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: குறைந்தபட்ச செயல் திட்டத்தை அறிவித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து புதிய அரசு அமைக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி நேற்று கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியது. இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.  மகாராஷ்டிராவில் பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து புதிய அரசு அமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மூன்று கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச வரைவு செயல் திட்டம் ஒன்றை ஏற்கனவே உருவாக்கியுள்ளன.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் அந்த கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் உச்சபட்ச அமைப்பான காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க காரியக் கமிட்டி கூட்டத்தில் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்த இறுதி முடிவு வெள்ளிக்கிழமை (இன்று) எடுக்கப்படவிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுடன் சேர்ந்து அரசு அமைக்க காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

நேற்று முன்தினம் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற மிக நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ் சவான், ‘‘மகாராஷ்டிராவில் விரைவில் சிவசேனா, காங்கிரஸ், தே.காங் கூட்டணி நிலையான அரசை அமைக்கும்’’ என்று கூறியிருந்தார்.  மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் குழப்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் பிருத்விராஜ் சவான் குறிப்பிட்டார். இதற்கிடையே, நேற்று மாலை மும்பையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திலும் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க இரு கட்சித் தலைவர்களும் ஒருமித்த முடிவை எடுத்தனர். மேலும் அமைச்சர் பதவிகளை பங்கிட்டு கொள்வது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது. இன்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசுகிறார்கள். இதைத் தொடர்ந்து கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம் வெளியிடப்பட்டு ஆட்சியமைப்பது தொடர்பாக முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் பேட்டியளித்த பிருத்விராஜ் சவான் கூறுகையில், ‘‘புதிய கூட்டணி அரசு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குறித்து நாளை(இன்று) முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்’’ என்்றார்.

சுழற்சி முறையில் முதல்வர் பதவி?
நேற்றுக் காலை மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜித் பவார், நவாப் மாலிக், ஜெயந்த் பாட்டீல், சுனில் தட்கரே, சகன் புஜ்பால் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது முதல்வர் பதவியை சிவசேனாவும் தேசியவாத காங்கிரசும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Tags : announcement ,Congress ,Shiv Sena ,Te Kang ,Maharashtra , Maharashtra, Shiv Sena, Nationalist Congress, Congress
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை