ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு ஆலோசனை குழுவில் சர்ச்சை எம்பி பிரக்யா நியமனம்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய பாஜ பெண் எம்பி.யான பிரக்யா சிங் தாகூர், பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மக்களவை தொகுதி பாஜ எம்பி.யாக இருப்பவர் பிரக்யா சிங் தாகூர். மகாராஷ்டிராவில் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள இவர், மக்களவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் பிரபலமானவர். தேசத்தந்தை காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேயை `தேசபக்தர்’ என்று இவர் கூறினார். இதற்கு, பிரதமர் மோடியும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், பிரக்யாவிடம் விளக்கம் ேகட்டு பாஜ.வும் நோட்டீஸ் அனுப்பியது.  இது தவிர, மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு குழுவின் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதும், தனது சாபத்தின் காரணமாகத்தான் என அதிரடியாக பிரக்யா கூறினார். இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் `பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழு உறுப்பினராக பிரக்யா சிங் தாகூர்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்’, என கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இக்குழுவில், 21 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் புதிய உறுப்பினராக பிரக்யா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த குழுவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பரூக் அப்துல்லா, திரிணாமுலை சேர்ந்த சவுகதா ராய், திமுக.வை சேர்ந்த ஏ.ராசா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.  பிரக்யாவின் இந்த நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காங்்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிலாவா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தீவிரவாதத்தை பரப்பும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாதுகாப்புத் துறை ஆலோசனை குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது. பிரக்யாவை பிரதமர் மோடி மன்னித்து, பாதுகாப்புத் துறை போன்ற நாட்டின் முக்கிய குழுவில் இடம்பெற செய்தது மன்னிக்க முடியாதது,’ என கூறியுள்ளார்.

Related Stories: