நவீன வசதிகளை பயன்படுத்துங்கள் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை விரட்டி சென்று போலீஸ் பிடிக்கக்கூடாது: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை போலீசார் விரட்டி சென்று பிடிக்கக்கூடாது என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் இரு சக்கர வாகனங்களில் பின்சீட்டில் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதையடுத்து டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்று கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் சசீந்திரன் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் ரண்டத்தானி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் சென்றார். உடனே போலீசார் பைக்கை நிறுத்த சைகை செய்தனர்.

 ஆனால் அவர் நிற்காமல் வேகமாக சென்றார். இதையடுத்து போலீசார் அவரை விரட்டி சென்றனர். ேபாலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் பைக்கை அதிவேகமாக ஓட்டி சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதி பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பாக ரண்டத்தானி போலீசார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வழக்கை விசாரித்தபோது நீதிபதி விஜயராகவன் கூறியதாவது:  ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை போலீசார் விரட்டி சென்று பிடிக்கக்கூடாது. போக்குவரத்து விதிகளை மீறி செல்பவர்களை கண்டுபிடிக்க பல நவீன வழிமுறைகள் உள்ளன.போலீசார் எவ்வாறு வாகன சோதனை நடத்த வேண்டும் என கடந்த 2012ம் ஆண்டு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

அதை போலீசார் மதிப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாகன சோதனை நடத்த வேண்டும் என்றும், மறைவான இடங்களில் ஒளிந்திருந்து திடீரென பாய்ந்து சென்று பிடிக்கக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் போலீசார் அதை கண்டுகொள்வதில்லை. எனவே இனிமேலாவது போலீசார் அது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. ஹெல்மெட் இன்றி வேகமாக செல்பவர்களின் வாகன பதிவெண்களை குறித்து வைத்து, வயர்லெஸ் மூலம் தகவல் பரிமாறி அவர்களை பிடிக்கலாம் என்றார்.

Related Stories: