உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விருப்ப மனு வினியோகம்: முதல் நாளிலே 1000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விருப்பமனு வினியோகம் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நேற்று முதல் விருப்ப மனு பெறப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் காங்கிரசில் உள்ள 72 மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் நேற்று காலை முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டது. ஏராளமான காங்கிரசார் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் மாவட்ட தலைவர் அலுவலகத்தில் விருப்ப மனுக்களை வாங்கி உரிய கட்டணத்துடன் ஒப்படைத்தனர்.

Advertising
Advertising

உள்ளாட்சி தேர்தல் என்பதால் அடிமட்ட தொண்டர்கள் முதல் ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பங்களை வாங்கினர். சென்னையை பொறுத்தவரை 4 மாவட்டங்கள் உள்ளன. அதில், வடசென்னைக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமயிலும், மத்திய சென்னைக்கு வீரபாண்டி தலைமையிலும், சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையிலும் விருப்பமனுக்கள் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் வாங்கப்பட்டன. தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்திற்கு மட்டும் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டது. பொறுப்பாளர்கள் தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன் ஆகியோரிடம் விருப்ப மனுக்களை அளித்தனர்.

தென்சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 141வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இல.பாஸ்கர், 178வது வார்டுக்கு திருவான்மியூர் மனோகரன், 124வது வார்டுக்கு மயிலை தரணி உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வாங்கி அந்த பதவிகளுக்கான கட்டணத்துடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். தொடர்ந்து, இரண்டு நாட்கள் சிறப்பு மனுக்கள் பெறப்படுகிறது. எஸ்.சி.,எஸ்.டி பிரிவினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு மட்டும் நிர்ணயித்த தொகையில் 50 சதவீதம் மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும். இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து காங்கிரஸ் மாவட்ட அலுவலகங்களிலும் முதல் நாளிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: