தமிழகத்தில் நல்லாட்சி என்பது திமுகவால் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை தில்லுமுல்லுகள் வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கும். ஆனால், தமிழ்நாட்டில்  நல்லாட்சி என்பது திமுகவினால்  தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்குத் நியாயமாக இடவரையறையுடன் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கை. அதைச் செய்ய வக்கின்றி, தேர்தலைக் கண்டு தொடை நடுங்கி, தள்ளிப்போட்டு கொண்டே போனார்கள். இப்போது கூட, மறைமுகத் தேர்தல் என்ற பெயரில் உள்ளாட்சித் தேர்தலை, சர்வாதிகார முறையிலே நடத்தப் பார்க்கிறார்களே தவிர, நியாயமாக-நேர்மையாக நடத்திட அதிமுக அச்சப்படுகிறது. அந்த அளவிற்குத் தோல்வி பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என்று  எதிர்பார்த்து காத்திருக்கிறார் முதல்வர். மறைமுகத் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பினால், இது பற்றி மு.க.ஸ்டாலினே கேட்பது விந்தையாக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி தருகிறார்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் நடைமுறையை சுட்டிக் காட்டுகிறார். தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட பலவற்றை அம்மையார் ஜெயலலிதா மாற்றியதும்; ஜெயலலிதா அம்மையார் நடைமுறைப்படுத்திய சிலவற்றை தலைவர் கலைஞர் ஆட்சியில் மாற்றி அமைத்ததும் உண்டு. நிர்வாக வசதிக்காக அப்படி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் என அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முடிவையே மாற்றிக்கொண்டு, மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்தாரா? தூத்துக்குடியில் அப்பாவி மக்களைத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியது அதிமுக அரசு. அந்த நேரத்தில் ஆறுதலும் நம்பிக்கையும் தெரிவிக்க நாம்தான் அவர்கள் பக்கம் நின்றோம். மக்களைச் சந்திக்கவே அஞ்சுகிறார்கள் ஆளுங்கட்சியினர்; நாம் மக்களுக்காக நாளும் உழைக்கிறோம்.

இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்ற நவம்பர் 21(நேற்று) இந்த நேரத்தில் கூட, திமுகவின் சார்பில் தென்பெண்ணையாற்றில் நமக்குள்ள உரிமையைக் காப்பதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களின் சார்பில் திமுக முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் பொதுமக்கள் பங்கேற்புடன் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதுபோலவே, கரூர் நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, மாவட்ட பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுவினருடன் 3000த்துக்கும் அதிகமான பொதுமக்களும் பங்கேற்று முழக்கம் எழுப்பினர். நவம்பர் 10ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பேசும்போது, மக்களை நாடி நாம் சென்றால், மக்கள் நம்முடன் வருவார்கள் என்பதை எடுத்துக் காட்டினேன். ‘நமக்கு நாமே’ பயணத்தில் அதனை நாம் நேரடியாகப் பார்த்தோம். இப்போதும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு உரியவர்களாக நாம் இருக்கிறோம். அதனால், திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக்கழக நிர்வாகிகள் அவரவர் பகுதியில் உள்ள மக்கள் பிரச்னைகளை முன்னெடுங்கள்; அவர்களின் பக்கம் நின்று குரல் கொடுங்கள்.

பேரெழுச்சி மிக்க போராட்டங்களை நடத்திய வரலாறு திமுகவிற்கு உண்டு. அந்த உணர்வுடன், பொதுமக்களின் பங்கேற்புடன் களம் காணுங்கள். மக்களுடன் நாம், நம்முடன் மக்கள் என்பதற்கேற்ப, மக்களுக்காக எப்போதும்  குரல் கொடுங்கள். மாற்றம் காண ஓயாது உழைத்திடுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை தில்லுமுல்லுகள் வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கும். ஆனால், தமிழ்நாட்டில்  நல்லாட்சி என்பது திமுகவினால் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்ற, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுங்கள்; மக்களுடன் இணைந்து போராடுங்கள். தமிழ்நாட்டின் இருள் விலகும்; சூரிய ஒளி பரவும்.

Related Stories: