விதிமீறி அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றிய 112 ஆட்டோ டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து

சென்னை: சென்னையில் தொடர்ந்து விதிகளை மீறி அதிகளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 112 ஆட்டோ டிரைவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆட்டோக்களில் போக்குவரத்து விதிகளை மீறி அதிகளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்களை ஏற்றி செல்வதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் கடந்த 20ம் தேதி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தணிக்கையில் போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக அதிக எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆட்களை ஏற்றி சென்றதாக 527 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 5ம் தேதி சென்னை முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறி பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 1,275 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 112 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட நபர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

Related Stories: