தேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது: மக்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு மையப்பகுதியை முற்றுகையிட்டு அமளி

புதுடெல்லி: ‘தேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது’ என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எம்பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியை ரொக்கமாக வழங்காமல், வங்கிகள் மூலம் வழங்குவதற்காக தேர்தல் நிதி பத்திரத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. குறிப்பிட்ட வங்கி கிளைகளில் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை விற்கப்படும் தேர்தல் நிதி பத்திரங்களை எந்த தனிநபரும், நிறுவனங்களும் வாங்கலாம். வாங்கப்பட்ட தேர்தல் பத்திரத்தை தங்களுக்கு விரும்பமான கட்சிகளுக்கு நிதியாக வழங்கலாம். அக்கட்சிகள் தேர்தல் பத்திரத்தை வங்கியில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். இதில், தேர்தல் பத்திரம் வாங்குவோரின் தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும்.

இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, வாங்கப்பட்ட ஒட்டு மொத்த தேர்தல் நிதி பத்திரங்களில் இருந்து 90 சதவீத நிதி, பாஜ கட்சிக்கே கிடைத்துள்ளது என்கின்றன புள்ளி விவரங்கள். இந்த விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக கூறி.  நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தற்போது கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. மக்களவையில், தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

அப்போது சபாநாயகர் ஓர் பிர்லா, ‘‘இது தவறானது. விளையாட்டு வீரர்கள் தொடர்பான முக்கியமான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. தயவு செய்து, அவையின் மையப்பகுதிக்கு வந்து என்னுடன் பேசாதீர்கள். அவையின் கண்ணியத்தை காக்கும் பொறுப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டு. அவையை நடத்த ஒத்துழையுங்கள். பூஜ்ய நேரத்தில் இது தொடர்பாக பேச அனுமதி வழங்குகிறோம்,’’ என்றார். 15 நிமிட கூச்சல் குழப்பத்திற்குப் பிறகு காங்கிரஸ் எம்பி.க்கள் அமைதி அடைந்தனர்.

பின்னர், காங்கிரஸ் அவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘‘அவையை சுமூகமாக நடத்த நாங்கள் ஒத்துழைக்கிறோம். அதே நேரம், முக்கிய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென நாங்கள் தரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை நீங்கள் அவமதிக்கக் கூடாது.

ஏனெனில், நாட்டில் நடக்கும் மிகப்பெரிய ஊழல் பற்றிதான் நாங்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனையும், தேர்தல் பத்திரமும் நாட்டின் மிகப்பெரிய ஊழல்கள். இந்த நாடு சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது,’’ என்றார். பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, ‘‘தேர்தல் நிதி பத்திரத்தில் முழுக்க முழுக்க ஆதாயம் பெற்றது ஆளுங்கட்சி மட்டுமே. முதலில் மக்களவை தேர்தலுக்காக மட்டும் என கொண்டு வரப்பட்ட இத்திட்டம், 2018ல் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக, ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. தேர்தல் நிதி பத்திரம் மூலம் ஊழல் மூடி மறைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதே போல், மாநிலங்களவையிலும் கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரசின் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ‘‘ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள்தான், நாட்டில் 90 சதவீத நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேர்தல் நிதி கொடுப்பதன் மூலம் கட்சிகளை கைக்குள் வைத்துக் கொண்டு ஆட்சியை கட்டுப்படுத்தி வருகிறார்கள்,’’ என்றார். கடும் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாஜ பதிலடி:

டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் அளித்த பேட்டியில், ‘‘தேர்தல் நிதி பத்திரங்கள் தேர்தலில் நேர்மையான பணத்தை கொண்டு வந்துள்ளன. இப்படிப்பட்ட நேர்மையான, வரி செலுத்திய வெளிப்படையான நிதி தேர்தலுக்கு தரப்படுவதை தோற்கடிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட ஊழல் அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. கருப்பு பணம் பெருக வேண்டும், அதை தேர்தலில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே தேர்தல் நிதி பத்திரத்தை எதிர்க்கிறார்கள்,’’ என்றார்.

வாடகைத்தாய் மசோதா தேர்வு கமிட்டிக்கு பரிந்துரை:

வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதாவில் எதிர்க்கட்சிகள் கோரிக்கைப்படி திருமணமாகி 5 ஆண்டுகள் சேர்ந்து வாழும் தம்பதிகளின் நெருங்கிய உறவினர் மட்டுமே வாடகைத் தாயாக செயல்படும் திருத்தம் நேற்று மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டது. பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மசோதா தேர்வு கமிட்டிக்கு அனுப்பப்படுகிறது என்றார்.

Related Stories: