நாடாளுமன்ற துளிகள்...

சந்திரயான்-2 திட்டம் தோல்வி கிடையாது:

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில், துணைக்கேள்விக்கு பதிலளித்து மத்திய விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியதாவது:நாட்டு மக்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் சந்திரயான்-2. அதில் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக திட்டமே தோல்வி என்று கூற முடியாது.

தொழில்நுட்ப ரீதியாக இத்திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. நிலவு வட்டப்பாதையில் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நமது லேண்டர் விண்கலம் நிலவிலேயே இருப்பதால், எதிர்கால திட்டச் செலவுகளை அது குறைக்கும். இத்திட்டத்தில் கடைசி 30 கிமீ தொலைவில் தான் பின்னடைவு ஏற்பட்டது.

இதுவரை எந்த நாடும் குறைந்தபட்சம் 2 முயற்சிக்குப் பிறகே நிலவில் பத்திரமாக விண்கலத்தை தரையிறக்கி உள்ளது. அமெரிக்கா கூட 8வது முயற்சியில் தான் நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரை இறக்கியது. எனவே சந்திரயான்-2 வெற்றி திட்டமே.  நிலவில் லேண்டர் தரை இறக்கும் தேதிக்கும், மோடி ஆட்சியின் 100 நாள் தினத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நிலவில் தரை இறங்கும் தேதி அறிவியல் பூர்வமாக தேர்வு செய்யப்பட்டதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

விளையாட்டு வீரர்கள் தேர்வில் முரண்பாடில்லை:

சர்வதேச விளையட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வது குறித்து விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசுகையில், ‘‘சர்வதேச போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு முறையாகவும், வெளிப்படையாகவும் நடக்கிறது. அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், விளையாட்டு கூட்டமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களின் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் விளையாட்டு கூட்டமைப்புகள் மூலமாக செய்திட அரசு விரிவான திட்டம் வகுத்துள்ளது. இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் உட்பட அனைத்து விளையாட்டு அமைப்புகளும் அரசுடன் சுமூகமாக இணைந்து செயல்படுகின்றன. முன்னாள் வீரர்களுக்கும் அரசு உதவி செய்கிறது,’’ என்றார்.

தண்ணீர் அடிப்படை உரிமையாக்க திட்டமா?

மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், ‘‘தண்ணீரை அடிப்படை உரிமையாக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. அதே சமயம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. வரும் 2024ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்க புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜல் ஜீவன் திட்டத்திற்காக 3.5 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது. நதிகள் இணைப்பு திட்டமும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தேசிய தொலைநோக்கு திட்டத்தின் கீழ் தண்ணீர் அளவுக்கதிகமாக உள்ள இடத்தில் இருந்து தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடத்திற்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கையில், 30 இணைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன,’’ என்றார்.

சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 தேர்வு கட்டணம் உயர்வு:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், `சிபிஎஸ்இ நிர்வாகம் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. இது லாப நோக்கத்துக்காக உயர்த்தப்படவில்லை. யாருக்கும் லாபம், நட்டம் இல்லை என்ற கொள்கையில் அடிப்படையில் தேர்வு கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,’ என்று கூறியுள்ளார்.

சிபிஐ.யில் 1000 காலி பணியிடங்கள்:

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து பேசிய மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிஜேந்திரா சிங், `ஒப்புதல் அளிக்கப்பட்ட 5,532 சிபிஐ அதிகாரிகள் பணியிடங்களில் 4,503 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,029 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் உயர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்களே அதிகளவில் நிரப்பப்படாமல் உள்ளன. உயர் அதிகாரிகளுக்கான மொத்தமுள்ள 5,000 காலி பணியிடங்களில் இதுவரை 4,140 மட்டுமே பணியமர்த்தப்பட்டு உள்ளனர். சட்டப்பிரிவு அதிகாரிகளை பொருத்தவரை அனுமதிக்கப்பட்ட 370க்கு பதில் 296 பேரும், தொழில்நுட்ப பிரிவில் 162 பேருக்கு பதிலாக 67 பேரும் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொண்டுள்ளது,’ என்று கூறியுள்ளார்.

ராணுவ பாணி தொப்பி `மிஸ்ஸிங்’:

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் தொடங்கிய போது மாநிலங்களவை காவலர்களின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.  புதிய சீருடை ராணுவ பாணியில் இருந்ததை கவனித்த முன்னாள் ராணுவத்தினர், எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இதனை மறுஆய்வு செய்யும்படி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கடந்த 19ம் தேதி மாநிலங்களவை செயலருக்கு உத்தரவிட்டார்.  இதனால், சீருடை மாற்றம் குறித்த மறு ஆய்வு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாநிலங்களவை கூடிய போது, காவலர்கள் ராணுவ பாணி தொப்பி இன்றி காட்சி அளித்தனர்.

காற்று மாசு பிரச்னை பற்றி பேசினால் கேரட் சாப்பிட சொல்றீங்களே நாங்கள் என்ன ஆடுகளா...? நாடாளுமன்றத்தில் காங். எம்பி கேள்வி

மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘காற்று மாசுவினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் கேரட் சாப்பிட வேண்டும்,’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது.  மாநிலங்களவையில் காற்று மாசு குறித்த விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி பிரதாப் சிங் பஜ்வா பேசியதாவது: டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது மிகவும் கவலைப்படக் கூடிய விஷயம். சமீபத்திய கிரீன் பீஸ் அறிக்கையானது, மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அரசு காற்று மாசுவை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர் ஒருவர் எங்களை கேரட் சாப்பிடும்படி கூறுகிறார். நாங்கள் என்ன ஆடுகளா?, மற்றொருவர் மக்கள் இசையை கேட்டபடி தங்கள் நாளை தொடங்க வேண்டும் என்று கூறுகிறார். மக்களின் நுரையீரல் தற்போது சுவாசிக்க திணறிக் கொண்டுள்ளது, தொண்டை அடைத்துக் கொண்டுள்ளது என்றார்.

Related Stories: