கேரளாவை போல சென்னையிலும் பயங்கரம்: குடும்பத்தினரை கூண்டோடு கொன்ற பெண்

சென்னை: ரூ.5 கோடி சொத்துக்காக பல ஆண்டுகளாக தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம்போட்டு கணவன், மாமனார், மைத்துனரை கொன்றார் சென்னையை சேர்ந்த இளம்பெண். மாமியாரையும் கடத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொல்ல திட்டமிட்டிருந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர். கேரளாவில் நடந்த தொடர் கொலைகளைப் போல சென்னையிலும் பெண் ஒருவர் அடுத்தடுத்து 3 கொலைகள் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் அமுதா(40). மூன்று தினங்களுக்கு முன்பு தனது சித்தி பத்மினி (65) என்பவரை அவரது மருமகள் மேனகா (29) அடியாட்களுடன் வந்து கடத்தி சென்று விட்டதாக அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் பத்மினியை தேடும் முயற்சியில் இறங்கினர். வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு கார்களில் வந்த 5க்கும் அதிகமானோர், பத்மினியை வலுக்கட்டாயமாக அடித்து காரில் ஏற்றிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைதொடர்ந்து மருமகள் மேனகாவை தொடர்பு கொண்ட போலீசார், பத்மினி குறித்து கேட்டனர். அதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் அயனாவரம் சந்திப்பு பகுதியில் பத்மினி ஒரு காரில் இருந்து இறக்கப்பட்டார். ஏற்கனவே போலீசார் மேனகாவின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்து வந்தனர். அப்போது மாமியார் பத்மினி இறக்கி விடப்பட்ட காரில் மேனகா இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மேனகாவை பிடித்து துருவி துருவி விசாரித்தனர். அப்போது மேனகா, போலீசாரிடம்  எனக்கும் எனது மாமியாருக்கும் சொத்து பிரச்னை உள்ளது. அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவே காரில் அழைத்துச் சென்றேன் என கூறினார். ஆனால் போலீசார் மேனகா மற்றும் மாமியார் பத்மினியை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

போலீசார், பத்மினியிடம் விசாரித்ததில், தன் மருமகள் மேனகா தன்னை காரில் கடத்தி சென்று அடித்ததாகவும், அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாகவும் அழுதபடி தெரிவித்தார். அதைதொடர்ந்து பத்மினி கொடுத்த வாக்குமூலத்தின் படி மருமகள் மேனகா மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மேனகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல் குறித்து போலீசார் கூறியதாவது: சென்னை தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்தவர் பத்மினி (65). இவருக்கு 1982ம் ஆண்டு சுப்புராயன் என்பவருடன் திருமணமாகி, செந்தில் மற்றும் ராஜ்குமார் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். கான்ட்ராக்டரான சுப்புராயன் படப்பையில் வீடுகள் மற்றும் இடங்கள் வாங்கி வசதியாக தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

மூத்த மகன் செந்திலுக்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேனகா என்பவரையும், இளைய மகன் ராஜ்குமாருக்கு பெரும்புதூரை சேர்ந்த ஆனந்தி என்பவரையும் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சொத்துக்காக மூத்த மகன் செந்திலுக்கும், தம்பி ராஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருவருக்கும் அவரது தந்தை சுப்புராயன் சொத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளார். இதில் திருப்தியடையாத மூத்த மகன் செந்தில், கடந்த 2011ம் ஆண்டு மேனகா மூலம் கூலிப்படையை வைத்து தனது தம்பி ராஜ்குமாரை கொலை செய்துள்ளார். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த செந்தில், நேராக தனது தந்தையிடம் சென்று மீண்டும் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் சில நாட்கள் கழித்து செந்தில் திடீரென மாயமானார். காணாமல்போன செந்திலின் மனைவி மேனகா, தனது மாமனாரிடம் தனது கணவருக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்து கொடுக்கும்படி கேட்டு அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2018ம் ஆண்டு செந்திலின் தந்தை சுப்புராயன்  கூலிப்படையினரால் மர்மமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ராஜேஷ்கண்ணா என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை செய்த ராஜேஷ் கண்ணாவின் மனைவியும், மாயமான செந்தில் மனைவி மேனகாவும் நண்பர்கள்.

இரண்டு மகன்கள் மற்றும் கணவன் இறந்த நிலையில், ஆதரவின்றி பத்மினி இருந்தார். இதனால் ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வந்த இரண்டாவது மருமகள் ஆனந்தி வீட்டில் தங்கினார். கணவர் இறந்த நிலையில், அனைத்து சொத்துக்களும் பத்மினி வசம் இருந்தது. இதனால் அடிக்கடி ஸ்ரீபெரும்புதூருக்கு சென்று மூத்த மருமகள் மேனகா சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால், இரண்டு மருமகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பத்மினி அயனாவரத்தில் உள்ள தனது அக்கா சரஸ்வதி வீட்டிற்கு வந்துவிட்டார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு மூத்த மருமகள் மேனகா, தனது மாமியார் பார்வதியை கூலிப்படையினர் உதவியுடன், துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்றுள்ளார். இரண்டு நாட்களாக பெரும்பாக்கம் மற்றும் திருநின்றவூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் அடைத்து வைத்து ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்படி சித்ரவதை செய்துள்ளார். சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல் உதவியுடன் போலீசார் தேடுவதை அறிந்த மேனகா தனது மாமியார் பத்மினியை மீண்டும் காரில் அழைத்து வந்து அயனாவரத்தில் இறக்கி விட்டு தப்பி செல்லும் போது சிக்கி கொண்டார்.மேனகாவுக்கும், அவரது மாமனார் சுப்புராயன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ்கண்ணாவுக்கும், இடையே பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சொத்துக்காக தனது மாமனார் சுப்புராயன் கொலையில் மூளையாக செயல்பட்டு போலீசாரிடம் சிக்காமல் தப்பியுள்ளார். கள்ளக்காதலன் ராஜேஷ்கண்ணா மற்றும் சிலரை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

இதுமட்டுமின்றி தனது மைத்துனர் ராஜ்குமாரை சொத்துக்காக தனது கணவரை உசுப்பேற்றி, கள்ளக்காதலன் மூலம் ஆளையும் அவரே ஏற்பாடு செய்து, ராஜ்குமாரை கொலை செய்துள்ளார். மேனகாவின் கள்ளக்காதல் தெரியாமல், அவர் சொன்னபடி அவரது கள்ளக்காதலன் மூலமே தனது தம்பியை கொலை செய்துள்ளார். அதன் பிறகு பல கோடி மதிப்புள்ள மொத்த சொத்தையும் மேனகா தன் கள்ளக்காதலனுடன் அபகரிக்கும் நோக்கில் தனது கணவர் செந்திலையும்  கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் செந்தில் மாயமானதாக நாடகமாடி போலீசார் மற்றும் உறவினர்களை நம்ப வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேனகாவுக்கு போலீஸ் உடந்தையா?

படப்பை பகுதியில் சொத்துக்காக இரண்டு கொலைகள் நடந்துள்ளது.  இந்த இரண்டு கொலை குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இந்த இரண்டு கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட ராஜேஷ் கண்ணாவை கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட மேனகா தனது அறிவு கூர்மையால் போலீசாரிடம் இருந்து தப்பி விட்டார். போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தாமல் விட்டு விட்டனர். இதனால் மேனகா பின்னணியில் பல முக்கிய பிரமுகர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் மேனகா குறித்து போலீசாருக்கும் சில தகவல்கள் தெரிந்து இருந்தும் கைது செய்யப்படாதது மர்மமாக உள்ளது.

மாமியார் கண்ணீர் பேட்டி

கடத்தப்பட்ட பத்மினி காவல் நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: “நான் ஏற்கனவே சொத்துக்காக எனது கணவரையும் இளய மகனையும் இழந்து விட்டேன். மூத்த மகன் உயிரோடு இருக்கிறானா? இல்லையா? என்பதே தெரியவில்லை. எனக்கு இந்த சொத்துக்கள் எதுவும் வேண்டாம். கடந்த 3 நாட்களாக உணவு தராமல் என்னை வெவ்வேறு இடங்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். சொத்து பத்திரத்தில் நான் கையெழுத்து போட்டு இருந்தால் கண்டிப்பாக என்னையும் கொன்று இருப்பார்கள்”. இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

கள்ளக்காதலன் சிக்கினால் துப்பு துலங்கும்

மேனகாவின் கள்ளக்காதலன் ராஜேஷ் கண்ணா மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேனகா போலீசாரிடம் சிக்கிய தகவல் அறிந்த கள்ளக்காதலன் ராஜேஷ்கண்ணா தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் பிடிபட்டால், மேனகா குறித்து அனைத்து உண்மைகளும் வெளிவரும். இருவரும் சேர்ந்து சொத்துக்காக இதுவரை எத்தனை பேரை கொலை செய்துள்ளனர் என்று தெரியவரும். மேலும், மேனகாவின் கணவர் செந்தில் மாயமானாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து முழு விபரங்களும் வெளியே வரும் என்று செந்தில் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான கணவர் குறித்து போலீசில் புகார் அளிக்காத மேனகா

கைது செய்யப்பட்டுள்ள மேனகாவின் கணவர் செந்தில், மாயமாகி ஒன்றரை வருடங்கள் ஆன போதிலும், இதுவரை காவல் நிலையத்தில் மேனகா புகார் அளிக்கவில்லை. அதற்கு மாறாக தலைமைச் செயலகத்தில் இயங்கும் முதலமைச்சர் தனிப்பிரிவில் மட்டும் கண்துடைப்புக்காக ஒரே ஒரு புகார் பதிவு செய்துள்ளார். தன் மீது சந்தேகம் வராமல் இருக்க அந்த புகார் மனுவை பத்திரமாக வைத்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் போலீசார் கணவன் மாயமானது குறித்து விசாரணை நடத்தி கண்டுபிடித்து விடுவார்களோ என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: