ராமேஸ்வரம் மீனவர்களின் படகை கப்பலால் மோதி விரட்டிய இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ளார். புதிய பிரதமராக அவரது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே பதவியேற்க உள்ளார். இதனால் இலங்கையில் தமிழர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென 6 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வழிமறித்து மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியதுடன், மீனவர்களை எச்சரித்து விரட்டினர்.

மீனவர்களின் 6க்கும் மேற்பட்ட படகுகளில் வலைகள் வெட்டப்பட்ட நிலையில், இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மீனவர்கள் தங்களது படகுகளை திருப்பிக் கொண்டு வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றனர். இவர்களை துரத்தி வந்த கடற்படை ரோந்து கப்பல் மோதியதில், ஒரு விசைப்படகின் பின்பகுதி பலகை உடைந்து சேதமடைந்தது. கடற்படையின் நடவடிக்கையால் மிரண்டு போன மீனவர்கள் இரவு முழுவதும், ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு நேற்றுகாலை கரை திரும்பினர். இந்திய கடல் எல்லைப்பகுதியில் ஏராளமான இலங்கை கடற்படை கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வலைகளை கடலில் வீசியதால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படை கப்பல்கள் முகாமிட்டுள்ளதால் கடலுக்கு செல்வதற்கே அச்சமாக உள்ளதென்று ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags : navy ,Sri Lankan ,fisherman ,Rameswaram ,Fishermen , Fishermen
× RELATED இலங்கை கடற்படை மீனவர்களை தொடர்ந்து...