×

மக்களவையில் மத்திய அமைச்சர் அறிவிப்பு: விவசாய கடன் தள்ளுபடி இல்லை

சென்னை: வேளாண் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பருவ மழை பொய்த்தது, காவிரி நீர் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் டெல்டாவில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. கடந்தாண்டு கடும் வறட்சியால் சம்பாவும் கைகொடுக்கவில்லை. நீரின்றி பயிர்கள் கருகியதை பார்த்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியிலும், தற்கொலை செய்தும் இறந்தனர். இதனால் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை வலியுறுத்தி காவிரி டெல்டா விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர். காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தனித்தனியாக போராட்டங்கள் நடந்தன. ஆனால் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. வேறு சில மாநிலங்கள் கடன் தள்ளுபடி கோரிக்கையை முன்வைத்தன.

இந்நிலையில் விழுப்புரம் விசிக எம்பி ரவிக்குமார் மக்களவையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுமா? தற்கொலை செய்த விவசாயிகள் எத்தனை பேர், அவர்கள் பட்டியல் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் உள்ளது. எனவே மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்ய முடியாது. மாநிலங்களுக்கு வேண்டுமானால் மத்திய அரசு உதவலாம் என்றார்.

மத்திய அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என திட்டவட்டமாக அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ‘‘பிரச்னையை திசை திருப்பும் நோக்கில் சட்டத்துக்கு புறம்பான தகவலை மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வேளாண் கடன், விலை நிர்ணயம் தொடர்பாக கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. வேளாண் கடனுக்கு நிதி ஒதுக்குவது, வட்டி யையும் மத்தியஅரசு தான் முடிவு செய்கிறது. மத்திய அரசு உத்தரவுப்படியே நபார்டு, கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி ஒதுக்குகிறது. ஆனால் விவசாயம் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது என்று மத்திய அமைச்சர் கூறுவது தவறு, கண்டிக்கத்தக்கது. பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல். தற்கொலை செய்த விவசாயிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் கூறியதன்மூலம் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதை மத்திய அரசு ஒப்புக்கொள்கிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை தொடர்ந்து கடைபிடித்து வருவதை மத்திய அமைச்சரின் அறிவிப்பு அம்பலப்படுத்தி உள்ளது என்றார்.

தமிழக விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமாறன் கூறுகையில்கஜா புயல் தாக்கி ஓராண்டு முடிந்த நிலையில்  இன்னும் டெல்டா விவசாயிகள் வாழ்வில் இருள் அகலவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் என எதிர்பார்த்த நிலையில் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல்பாய்ச்சி உள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து பெற்ற நிதியை மத்திய அரசு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை வழங்கி உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் விவசாய கடன் ரூ.1.75 கோடி தான். இவற்றை தள்ளுபடி செய்தால் பல லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள். இந்தியா முழுவதும் உள்ள 130 கோடி மக்களுக்கு உணவு படைக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போல இந்த அறிவிப்பு உள்ளது என்றார்.

தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சுந்தர விமலநாதன் கூறியதாவது: மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சியிலும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பா.ஜ. அரசில் விவசாயிகளுக்கு எந்த சலுகையும் இல்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மத்திய அரசு கூறுகிறது. விவசாயிகளுக்கு எந்த சலுகையும் செய்யாமல் குறிப்பாக கடனைக்கூட தள்ளுபடி செய்யாமல் எப்படி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வாரி வழங்கும் மத்திய அரசு விவசாயிகளுக்கும் உதவ வேண்டும். குறிப்பாக விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை கொடுத்தாலே போதும். அதையும் தரவில்லை. கடனையும் தள்ளுபடி செய்ய மறுப்பதால் எதிர்காலத்தில் விவசாயம் அழியும் ஆபத்து உள்ளது என்றார்.

Tags : Union Cabinet , Agricultural loan
× RELATED நஷ்டத்தில் இயங்கி வரும் லஷ்மி விலாஸ்...