மக்கள் சொகுசாக பயணம் செய்வதற்கு ஏதுவாக வாஷ் பேசின், கம்ப்யூட்டர் வசதியுடன் ஆட்டோவை வடிவமைத்த டிரைவர்

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வாஷ் பேசின், டெஸ்க்டாப் மானிட்டர், மொபைல் போன் சார்ஜிங் பாயின்ட்  உள்ளிட்ட வசதிகளுடன் தனது ஆட்டோவை வடிவமைத்து இயக்கி வருகிறார். இந்த ஆட்டோவில் பயணம் செய்வது புது அனுபவமாக இருப்பதாக  பயணிகள் கூறுகின்றனர்.மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்யவான் கீதே. இவர் தனது ஆட்டோவை முற்றிலும் வித்தியாசமாகவும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகள்  கொண்டதாகவும் மாற்றி அமைத்திருக்கிறார். இவரது ஆட்டோவில் கை, முகம் கழுவ வாஷ் பேசின், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மொபைல் போன்களை  சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயின்ட், டெஸ்க்டாப் மானிட்டர் போன்ற வசதிகள் உள்ளன. ஆட்டோவில் செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால்,  பயணிகளிடையே இவரது ஆட்டோவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. பலர் சத்யவான் கீதேயின் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.  தங்களுக்கு தேவைப்படும் போது முன்கூட்டியே சத்யவான் கீதேக்கு போன் செய்து ஆட்டோவை புக் செய்து கொள்கின்றனர். அந்தளவுக்கு அவரது  ஆட்டோவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. சத்யவான் கீதே ஒரு கிமீ தூரம் வரை பயணம் செய்யும் முதியவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

சத்யவான் கீதே கூறுகையில், ‘‘எனது ஆட்டோவில் நீங்கள் உங்களது செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம், குடிக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்  கிடைக்கும், வாஷ் பேசின் வசதியும் உண்டு, முதியவர்கள் ஒரு கிமீ தூரம் வரை பயணம் செய்தால் அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்பதை  ஒரு கொள்கையாக கொண்டிருக்கிறேன். பயணிகள் நல்ல வசதியாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் எனது ஆட்டோவில் இந்த  வசதிகளை செய்திருக்கிறேன்’’ என்றார்.இவரது ஆட்டோவுக்கு பின்பக்கத்தில் ‘மும்பையின் வீடு போன்ற முதலாவது ஆட்டோ’, ‘குடும்பத்துடன் முழுமையான கேளிக்கை கிடைக்கும்’,  ‘மும்பையின் மிக வரவேற்பு பெற்ற ஆட்டோ’ ஆகிய வாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.

Related Stories: