×

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்

கொழும்பு:  இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே நேற்று பதவியேற்றார். இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின்  சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் புதிய அதிபராக கடந்த திங்களன்று பதவியேற்றார். அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட  சஜீத் பிரேமதாசா தோல்வி அடைந்ததை தொடர்ந்து,  பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலகும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். மேலும், தனது ராஜினாமா  கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் அவர் வழங்கினார். ரணில் விக்ரமசிங்கேவின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்  கொண்டார். இதனை தொடர்ந்து, நாட்டின் புதிய பிரதமராக தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே  உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று பிற்பகல் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்ெகாண்டார். இவர் அதிபராக இருந்தபோதுதான், புலிகளுடன்  இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பாதுகாப்பு அமைச்சராக இருந்து இந்த போரை வழி நடத்திய கோத்தபய ராஜபக்சேதான் இப்போது அதிபராகி  இருக்கிறார்.

ஊழல் வழக்கிலிருந்து அதிபர் விடுவிப்பு
இலங்ைக அதிபர் கோத்தபயாவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அட்டர்னி ஜெனரல்  சார்பாக துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பெய்ரிஸ் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் நீதிமன்றத்தில், அரசியலமைப்பு விதிகளின்படி  அதிபருக்கு எதிராக எந்த ஒரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளையும் தொடரக் கூடாது என்றும், எனவே அனைத்து குற்றச்சாட்டுகளில்  இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே மீது தொடரப்பட்ட டிஏ ராஜபக்சே  நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதில் ₹3.3 கோடி ஊழல் வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்கவும், கோத்தபயாவுக்காக பிணை  வழங்கியவர்களையும் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்சேவின் வெளிநாட்டு பயணத்துக்கு விதிக்கப்பட்ட தடையையும்  நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனைதொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக வருகிற 29ம் தேதி அபதிர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகிறார்.இதற்கிடையே, தனக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடிக்கு, இலங்ைக பிரதமர் ராஜபக்சே நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள டிவிட்டர்  பதிவில், ‘‘இப்பகுதியின் அமைதி, வளர்ச்சிக்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Mahinda Rajapaksa ,Sri Lanka , Mahinda Rajapaksa , new Prime Minister, Sri Lanka
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...