எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடத்திற்காக 75 மரங்களை வெட்ட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக, பழமையான 75 மரங்களை வெட்ட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் எழும்பூரை சேரந்த கேப்டன் பி.பி.நாராயணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:  எழும்பூர் கண் மருத்துவமனை மிகப்பெரிய பழமையான கண் மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், மருத்துவமனையை விரிவுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டிடங்களை கட்டப்படுகிறது. இதற்காக, வளர்ந்து பெரிதாக உள்ள 75 மரங்களை வெட்டுவதற்கு மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த மரங்களில் பல வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளும் இந்த பகுதியில் வசிக்கின்றன. மேலும், இந்த மரங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.   மருத்துவமனை விரிவாக்கம் அவசியம்தான்.

அதே நேரத்தில் பசுமையான இந்த மரங்களை வெட்டாமல் அதே வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் கட்டிடங்களை கட்டலாம். எனவே, எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75 மரங்களை வெட்டக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75 மரங்களை வெட்ட தடை விதிக்கப்படுகிறது. அதே வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்தும், இந்த மரங்களை மருத்துவமனை வளாகத்தில் வேறு இடத்திற்கு மாற்றி நடுவது குறித்தும் திட்டம் உள்ளதா என்பது குறித்து அரசு பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: