பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி : போலீசார் விசாரணை

ஆவடி: திருமுல்லைவாயல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் 20 வயது பெண். இவர், திருவள்ளூர் அருகே தொழுவூர் கிராமத்தை சேர்ந்த சுந்தர் (24) என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பாக பழகினார். அவரை திருமணம் செய்துகொள்வதாக சுந்தர் உறுதியளித்ததால் நெருங்கி பழகினர். இந்நிலையில் இளம்பெண்ணை சந்திப்பதை சுந்தர் திடீரென தவிர்த்ததால் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 16ம் தேதி புகார் கொடுத்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சித்ராதேவி பேச்சுவார்த்தை நடத்தியபோது இளம்பெண்ணை திருமணம் செய்வதாக சுந்தர் உறுதி அளித்துள்ளார். அதன்படி அவர்களது திருமணம் நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் நடப்பதாக இருந்தது.

இதையடுத்து இளம்பெண் உறவினர்களுடன் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு சென்றார். ஆனால், சுந்தர் வரவில்லை என தெரிகிறது. அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இதனால் இளம்பெண் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் வீட்டில் இருந்த 20க்கு மேற்பட்ட தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: