சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் தனியார் ஊழியர்கள் நியமனம்: பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் தற்போது 45.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் முதல் திட்டம் செயல்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறு, சிறு பொறுப்புகளில் தனியார் ஊழியர்களை நியமனம் செய்து வந்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலைய கட்டுப்பாட்டாளர்களை அப்பணியில் இருந்து மாற்றியது. அப்பணியின் பெயரை நிலையை பொறுப்பாளர்கள் என மாற்றி அதற்கென தனியாக தனியார் ஆட்களை நியமனம் செய்தது. இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடந்து, ரயில் ஓட்டுநர்களையும் தனியார் ஆட்களை வைத்தே இயக்குவதாகவும் புகார் எழுந்தது.

தற்போது மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் மற்றும் பணிமனை கட்டுப்பாட்டாளர் என்ற இரு முக்கிய பதவிகளுக்கு தனியார் ஊழியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் வட்டாரங்கள் கூறியதாவது:

மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கனவே, ரயில் ஓட்டுநர், தொழில்நுட்ப பராமரிப்பாளர்கள், நிலைய கட்டுப்பாட்டாளர் பொறுப்பை தனியார் மயப்படுத்தியது. தற்போது கோயம்பேடு தலைமையகத்தில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் மற்றும் பணிமனை கட்டுப்பாட்டாளர் பொறுப்புகளை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

மெட்ரோ ரயில் பணியில் இதயம் போல் உள்ள இந்த இரண்டு பணிகளையும் தனியார் வசம் ஒப்படைப்பது பிரச்னைக்குரியது. தற்போது 11 தனியார் ஊழியர்களை இதற்கென தயார் செய்து வருகிறது. சான்றிதழ் வைத்துள்ள நிரந்தர ஊழியர்களை அவர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் 10 முதல் 15 வருடம் பணி அனுபவம் வாய்ந்தவர்களைதான் இப்பணியில் அமர்த்துவார்கள். தற்போது உள்ளவர்கள் முறையான பயிற்சி பெற்றவர்கள். ஆனால், நடைமுறைகளை மீறி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.  இவ்வாறு தெரிவித்தன.

Related Stories: