சிசிடிவி கேமரா பதிவு வெளியானதால் திருடிய பைக்கை அதே இடத்தில் விட்டு சென்ற வாலிபர்: பள்ளிகரணையில் பரபரப்பு

வேளச்சேரி: சிசிடிவி கேமரா பதிவு வெளியாதனால், திருடி சென்ற பைக்கை அதே இடத்திலேயே கொண்டு வந்து விட்டு சென்ற வாலிபரால் பள்ளிக்கரணையில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை   அண்ணாநகரை சேர்ந்தவர் கார்த்திக் (30). நடன பயிற்சியாளர். இவர் பள்ளிகரணை ஜெயச்சந்திரன் நகரில் உள்ள இந்தியன் வங்கி மாடியில்   நடன பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர், கடந்த 19ம் தேதி   தனது பைக்கில்     பயிற்சி மையத்துக்கு வந்தார். பின்னர், இருசக்கர வாகனத்தை கீழே நிறுத்திவிட்டு நடன பயிற்சி மையத்திற்கு சென்றார். பயிற்சி வகுப்பு முடித்து, கீழே வந்து பார்த்தபோது பைக்கை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில்   பதிவான காட்சியை பார்த்தபோது, வாலிபர் ஒருவர் வாகனத்தின் அருகில் வெகு நேரமாக நின்று போன் பேசுவதுபோல் நடித்து சிறிது நேரம் கழித்து பைக்கை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சியுடன் பள்ளிகரணை காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சியும்   சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பைக் அதே இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

பைக்கைப் பார்த்து கார்த்திக் சந்தோஷ அதிர்ச்சி   அடைந்தார்.  பைக் திருடி செல்லும் காட்சி வலைத்தளங்களில் பரவியதால் இதை பார்த்த பைக் திருடன் பிடிபட்டு விடுவோமோ? என்ற அச்சத்தில் திருடிய அதே இடத்தில் பைக்கை மீண்டும் விட்டு சென்றுள்ளார். மீண்டும் பைக் கிடைத்தது குறித்து பள்ளிகரணை காவல் நிலையத்திற்கு கார்த்திக் தகவல் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து பைக்கை திருடிச் சென்று  பின்னர் மீண்டும் கொண்டு வந்து விட்டுச் சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>