அறநிலையத்துறை கையகப்படுத்திய நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு: உயரதிகாரி நடவடிக்கையால் சர்ச்சை

சென்னை: சென்னை நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. ஏராளமான பக்தர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய இங்கு வருகின்றனர். இதனால் கோயில் வருவாய் பல மடங்கு அதிகரித்தது. இந்த நிலையில் தனியார் அமைப்பு மூலம் நிர்வகிக்கப்பட்ட இக்கோயிலில் நிர்வாக குளறுபடி நடப்பதாக சிலர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் கடந்த 2016ல் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் விசாரணை நடத்தினார். அதில் கோயில் நிர்வாகத்தில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்தது.  இதை தொடர்ந்து மண்டல இணை ஆணையர் அறநிலையத்துறை கமிஷனருக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் பேரில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்கோயில் மயிலாப்பூரில் உள்ள முண்டககண்ணியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள குழு கோயிலாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீரென மண்டல உயரதிகாரி இந்த கோயிலை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதற்காக, லட்சக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்பேரிலேயே ஆஞ்சநேயர் கோயிலை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரி அறநிலையத்துறை கமிஷனருக்கும், தமிழக அரசுக்கும் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தின் பேரில் விரைவில் ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த கோயில் தனியாரிடம் ஒப்படைக்கபடவிருக்கிறது. இந்த விவகாரம் அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: