×

மறைமுக தேர்தலுக்கு வழிவகுக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்வு முறையில் அதிமுக அரசு கொண்டு வந்துள்ள மாற்றத்துக்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளது. அதேபோல பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் அதிமுகவின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ளன. இந்நிலையில், அரசின் உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கை தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோரை கவுன்சிலர்களே தேர்வு செய்வதற்கான புதிய அவசர சட்டத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் பிறப்பித்தார்.

தமிழக அரசின் முடிவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மட்டுமின்றி அதிமுக கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான பாஜவும் நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிமுகவின் கூட்டணி கட்சிகளை சமாளிக்கவே, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக - பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. பாஜ மட்டுமின்றி அதிமுகவில் உள்ள பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கூட தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளன. ஏனெனில் புதிய சட்டம் மூலம் ஒரு மேயர், நகராட்சி தலைவர் பதவி கூட கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். கவுன்சிலர் பதவிகளும் கூட்டணி கட்சிகளுக்கு குறைவாகத்தான் கிடைக்கும். அதிமுகதான் அதிக இடங்களில் போட்டியிடும். பெரும்பான்மை கவுன்சிலர்களின் அடிப்படையில் மேயர் மற்றும் தலைவர் பதவிகள் அனைத்தையும் அதிமுகவுக்கே கிடைக்க வேண்டும் என்ற திட்டம்தான், இந்த சட்டத்தின் உண்மையான நோக்கம் ஆகும். அதிமுக அரசின் இந்த நடவடிக்கை பற்றி தமிழக பாஜ தலைவர்கள், டெல்லி தலைமைக்கு புகார் அனுப்பி உள்ளனர். இதனால் பாஜ தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, விரைவில் அதிமுக தலைமையிடம் இதுபற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பாஜ வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்திய அரசின் உதவியுடன் தான் தமிழக அரசு பிரச்னையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவினர் பாஜகவை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு பிறகு நடந்த வேலூர் எம்பி தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட எங்களை பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக வெற்றி பெற்றால், அது தமிழகத்தில் பாஜ காலூன்றி விடும் என்று அதிமுக பயப்படுகிறது. அதிமுக தொடர்ந்து எங்களை அவமானப்படுத்தி வருகிறது. ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள மட்டும் நாங்கள் வேண்டும், தேர்தலுக்கு வேண்டாமா. இதுபற்றி டெல்லி தலைமைக்கு புகார் அனுப்பி உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்” என்று ஆவேசமாக கூறினர்.

பாஜ மட்டுமின்றி மற்ற கூட்டணி கட்சிகளும் அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனால் மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சூசகமாக தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பேட்டியளித்த அவர், ‘‘உள்ளாட்சி தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் சேர மேலும் சில கட்சிகள் பேசிக்கொண்டுள்ளன. அவர்களும் கூட்டணியில் வர வாய்ப்புள்ளது. கூட்டணியில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது’’ என்றார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், “உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக, பாஜ, புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்து நிற்க வேண்டும். இதன்மூலம் அவரவர் பலம் தெரிந்துவிடும். இல்லாவிட்டால் எங்களால்தான் ஆட்சிக்கு வந்தார்கள் என கூறுவார்கள். தனித்து நின்றால் அவ்வாறு கூற மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் இல்லை என்று அதிமுக அரசு அறிவித்துள்ளது மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வெளிப்படையான பேட்டி ஆகியவை பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிமுகவுடன் கடந்த மக்களவை தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் நீடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி வருகிற 24ம் தேதி சென்னை அருகே நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஐகோர்ட் மதுரை கிளையில், உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் மற்றும் தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்யும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளதை எதிர்த்து வக்கீல் முகமது ரஸ்வி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இது விசாரணைக்கு வர உள்ளது.

அடுத்து, தமிழக முதல்வர், அமைச்சர்கள் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கூறி வருகிறார்கள். உச்ச நீதிமன்றமும் டிசம்பர் 13ம் தேதிக்குள் உள்ளாட்சி நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் முதல் வாரம் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன்படி அறிவிக்கப்பட்டது. ஆனால் தலைவர் பதவிகளுக்கு இதுவரை ஒதுக்கீடு செய்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. அதேபோன்று, எஸ்சி, எஸ்டியினருக்கான தலைவர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் டிசம்பர் விடுமுறை நாட்களில்தான் நடத்த முடியும். அப்படியே, டிசம்பரில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் அரசு பள்ளி ஆசிரியர்கள்தான் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கு 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்கே ஒரு மாதம் காலஅவகாசம் வேண்டும். தற்போதுதான் தேர்தலில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, டிசம்பர் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவித்துவிட்டு, டிசம்பர் இறுதியில் தேர்தல் நடத்த முடியாது. டிசம்பர் மாதத்தை விட்டால், அடுத்து ஏப்ரல் அல்லது மே மாதம் தான் தேர்தல் நடத்த முடியும். இதுபோன்ற பல குழப்பங்கள் நடுவே, தமிழகத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. தமிழக அரசும் தொடர்ந்து காலதாமதம், அவசர சட்டம் பிறப்பித்தது என்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் சாக்குபோக்கு காட்டுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழக அரசின் இதுபோன்ற குழப்பத்தை காரணம் காட்டி யாராவது நீதிமன்றம் சென்று தடை பெறுவார்கள் என்று அரசு நம்புகிறது.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் உளவுத்துறை தகவல் ஒரு சர்வே எடுத்தது. அதில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் ஒரு மாநகராட்சியை கூட அதிமுக பிடிக்காது. மக்களவை தேர்தல்போல திமுக கூட்டணி அத்தனை சீட்டுகளையும் அள்ளிவிடும் என்று தெரியவந்தது. இதை தமிழக முதல்வருக்கு உளவுத்துறை கொடுத்தது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த நிலையில், இந்த மறைமுக தேர்தல் முடிவு சட்டத்தை கையில் எடுக்கப்பட்டது.

மேலும் மேயர், தலைவர் பதவி, உறுப்பினர் பதவிகளில் பெண்கள், எஸ்சி, எஸ்டியினருக்கான ஒதுக்கீடு குறித்து இதுவரை அரசு அறிவிக்கவில்லை. இந்த அறிவிப்பு வெளியிடுவதற்குள், மறைமுக தேர்தல் சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 13ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனால் தேர்தல் நடத்தியே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இந்தநிலையில்தான் புதிய சட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இது குறித்து யாராவது நீதிமன்றத்துக்கு செல்வார்கள். இதை வைத்து தேர்தலை தள்ளிப் போடலாம் என்று அரசு கருதுகிறது என்றார்.

Tags : election , Local election
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு