கமல்ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன்

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று ஆபரேஷன் நடக்கிறது. ‘சபாஷ் நாயுடு படத்தில் நடிப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன், அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு சென்னை திரும்பினார். பிறகு இங்கு மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய அவர், மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி வரும்போது திடீரென்று தவறி விழுந்தார். இதில் அவரது வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் டைட்டானியம் கம்பி ஒன்றை பொருத்தினர்.

Advertising
Advertising

இதையடுத்து ‘சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, வழக்கமான கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், காலில் ஆபரேஷன் செய்த பகுதி முழுமையாக குணமடைந்ததால், காலில் பொருத்தப்பட்ட டைட்டானியம் கம்பியை நீக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், அதற்கான அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார். தற்போது டாக்டர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன், இன்று சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, அவரது காலில் பொருத்தப்பட்ட டைட்டானியம் கம்பியை  நீக்குகின்றனர்.

பிறகு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்  கமல்ஹாசன், வீடு திரும்பிய பிறகு சில நாட்கள் கட்டாய ஓய்வெடுக்கிறார்.  எனவே, தொண்டர்கள் அவரை நேரில் சந்திக்க வேண்டாம் என்றும், பூரண குணமடைந்த பிறகு கமல்ஹாசன் அனைவரையும் சந்திப்பார் என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: