×

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மக்களவையில் அமைச்சர் தகவல்

புதுடெல்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக மக்களவையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.  தமிழகம் - கேரளா இடையே முல்லை பெரியாறு அணை தொடர்பாக நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. அணை பலவீனமாக உள்ளதாக கூறி நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், மக்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது, இந்த அணையை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இடுக்கி தொகுதி காங்கிரஸ் எம்பி குரியகோஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதிலில் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது. அதற்கு எந்த அபாயமும் இல்லை.

அந்த அணையின் அருகே புதிய அணை கட்ட இரு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.  மத்திய நீர் ஆணையத்தின் அணை பாதுகாப்பு அமைப்பின் தலைமை பொறியாளர் தலைமையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 2 உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 3 பேர் கொண்ட ஆய்வுக்குழு, கடந்த ஜூன் 4ம் தேதி அணையை ேநரில் ஆய்வு செய்தது. நீர்பிடிப்பு பகுதிகள், நீர்வரத்து கணக்கீடு, கருவிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அணை பாதுகாப்பாக உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016, ஏப்ரல் மாதம் முதல் புதிய அணை கட்டுவது தொடர்பாக 13 திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதில், 2 திட்டங்களுக்கு மத்திய நீர் ஆணையம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. அதில், கேரளாவில் உள்ள அட்டபாடி நீர் பாசனத் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்கள் சில அறிவுரைகளுடன் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Mullai Periyar Dam ,Lok Sabha ,Minister , முல்லை பெரியாறு அணை ,மக்களவை,அமைச்சர்
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...