×

நிதி பற்றாக்குறையால் சிக்கல் 2 ஆண்டாக இழுபறியில்இலவச ஆடு, மாடு திட்டம்: ஏப்ரல் முதல் இதுவரை ஒரு விவசாயிக்கும் வழங்கவில்லை

சிறப்பு செய்தி
தமிழ்நாட்டில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் கடந்த 2011ல் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்  கீழ் ஆண்டுக்கு ஒரு லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, தலா 4 ஆடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் துவங்கிய முதல் ஆண்டிலேயே ரூ.925 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு, செம்மறி ஆடு அல்லது வெள்ளாடாக வழங்கப்படும். ஒரு கிடாவும், மூன்று  ஆடுகளும் அளிக்கப்படும். ஆடுகளை வாங்கும்போது, பயனாளிகள் ஐந்து அல்லது ஏழு பேர்  கொண்ட குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவர். அரசுப் பண்ணைகளில் ஆடுகள் விற்பனைக்கு இருந்தால் அவை விவசாயிகளுக்கு வாங்கிக்  கொடுக்கப்படும். பக்கத்து மாநிலங்களில் விற்பனைக்கு இருந்தாலும் அவை கொள்முதல்  செய்யப்படும்.

இலவச திட்டத்தின் கீழ் வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை  செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இலவச ஆடுகளை பெற விவசாயிகள், நிலங்கள் இல்லாத ஏழை விவசாய கூலிகளாக இருக்க  வேண்டும். கிராமங்களில் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும். பசு அல்லது ஆடுகளை  சொந்தமாக வைத்திருக்கக்கூடாது. அரசுப்பணியில் இருக்க கூடாது. நெருங்கிய  உறவினர்கள்கூட அரசுப்பணியில் இருக்கக்கூடாது.இலவச மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருப்பவர்களுக்கு, ஆடுகள்  வழங்கப்பட மாட்டாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

 நடப்பாண்டில், இத்திட்டம் உள்பட கால்நடை பராமரிப்புக்கு ரூ.1,252 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், மாவட்டம் தோறும் தலா 1,500 விவசாயிகளுக்கு இலவச ஆடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை  மாவட்டத்தில் 1,400 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வழங்க  திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ஒரு ஆடுகூட வழங்கப்படவில்லை. கால்நடை பராமரிப்பு  துறையினருக்கு மானியம் ஒதுக்கீடு செய்யாததால் ஆடுகள் வழங்கும் திட்டம்  தாமதமாகி வருகிறது. வரும் டிசம்பருக்குள் ஆடுகள்  வழங்கப்படவேண்டியுள்ளது. நிதி கிடைத்து, ஆடுகளை சந்தையில் தேடிப்பிடித்து  வாங்கவேண்டியிருக்கிறது.

உள்ளூர் சந்தைகளில் ஆடுகளின் விலை உச்சத்தில்  இருப்பதால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஆடுகள் வாங்க  திட்டமிடப்பட்டுள்ளது. எப்போது நிதி வரும், எப்போது ஆடுகள்  ஒப்படைக்கப்படும் என கால்நடை பராமரிப்பு துறையினரால் உறுதியாக தெரிவிக்க  முடியவில்லை. கடந்த 2 ஆண்டாக நிதி பற்றாக்குறையால்  இலவச ஆடுகள் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவுகிறது. இதேபோல், இலவச பசு வழங்கும் திட்டமும் அமலில் உள்ளது. இத்திட்டத்துக்காக கடந்த  5 ஆண்டுகளுக்கு ரூ.232 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் 60 ஆயிரம் பசுக்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த என்னென்ன விதிமுறைகள்  பின்பற்றப்படுகிறதோ அதே வழிமுறைகள் இலவச பசுக்கள் அளிக்கும் திட்டத்துக்கும்  பின்பற்றப்படுகிறது.

கலப்பின ஜெர்சி பசுக்கள், 5 வயதுக்கு குறைவான வயதுடைய மாடுகள்  கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இலவச திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பசுக்களை 4 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பது விதிமுறை. நடப்பாண்டில் ரூ.56  கோடி செலவில் 12  ஆயிரம் பசுக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால், இதில், 18 சதவீதம்கூட  எட்டப்படவில்லை. இதுபற்றி கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்ப இத்திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Tags : Fiscal deficit, free goat, cow program
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...