நண்டு குஞ்சுகள் ஏற்றுமதி செய்து இரட்டிப்பு பணம் தருவதாக குடியாத்தத்தை சேர்ந்தவர்களிடம் 25 கோடி நூதன மோசடி: சென்னை நிறுவனம் மீது புகார்

குடியாத்தம்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சம்பத் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை, நடுபேட்டை, புதுப்பேட்டை உட்பட பல பகுதிகளில் உள்ள மக்களிடம். தனியார் நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி என்றும், அதில் முதலீடு செய்தால் 10 மாதங்களில் இரண்டு மடங்காக பணம் திருப்பி அளிக்கப்படும் என்று ஆசைவார்த்தை கூறினார். மேலும், அதே நிறுவனத்தின் பிரதிநிதி என்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா என்பவரும் ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’, ‘வாட்ஸ் அப்’ போன்ற சமூக வலைதளங்கள்  மூலம் குடியாத்தம் பகுதி மக்களிடம், அறிமுகமாகி, முதலீடு செய்பவர்களுக்கு இருமடங்காக பணமும், ஒவ்வொரு வாரமும் வட்டி வழங்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து ஆதித்யா என்கிற குமரன் என்பவர் டிப்டாப் உடையுடன், நுனிநாக்கு ஆங்கிலத்துடன் சம்பத், ரேணுகா ஆகியோரின் தொடர்பில் வந்தவர்களை நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் கடந்த ஆண்டு அக்டோபரில் வேலூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூட்டம் நடந்தது. இதில் பிச்சனூர்பேட்டை, நடுப்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 300 பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தங்கள் நிறுவன தலைமை அலுவலகம் சென்னை வடபழனி பகுதியில் இயங்குவதாகவும், மாமல்லபுரத்தில் நண்டு குஞ்சு பொரிப்பு நிறுவனம் நடத்தி  நண்டு குஞ்சுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும் கூறினார்.  1 லட்சம் முதலீடு செய்தால், ஒரே ஆண்டில் இருமடங்காக கிடைக்கும் என்றுதெரிவித்துள்ளனர்.  

இதை நம்பி  1 லட்சம் முதல் 50 லட்சம் வரை  பொதுமக்கள் முதலீடு செய்தனர்.  ஒரு ஆண்டு கடந்தும் வட்டியும், அசலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தவர்கள், சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்ட போது அந்த எண்கள் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சென்னை வடபழனியில் உள்ள  அலுவலகத்திற்கு சென்று கேட்டனர். அங்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியாத்தம், டிஎஸ்பி சரவணனிடம் நேற்று புகார் அளித்தனர். அதில் 300க்கும் மேற்பட்டவர்களிடம் 25 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருந்தனர்.  இதுதொடர்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: