×

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அவசர சட்டத்தை எதிர்த்து மனு செய்தால் விசாரிக்கப்படும்: உடனடியாக ஏற்க ஐகோர்ட் கிளை மறுப்பு

மதுரை: மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட  பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து மனு செய்தால் விசாரிக்கப்படும் என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது.   ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் நேற்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அப்போது வக்கீல் கமுதி நீலமேகம் ஆஜராகி கூறியதாவது: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் மற்றும் தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்யும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்வதன் மூலம் குதிரை பேரம் அரங்கேற வாய்ப்புள்ளது.

இதை எதிர்த்து வக்கீல் முகமது ரஸ்வி, பெயரில் பொதுநல மனு தாக்கல் செய்கிறோம். அதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார். அப்போது நீதிபதிகள், ‘‘உங்களது கோரிக்கை தொடர்பான மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது. இதுதொடர்பாக நீங்கள் மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்’’ என்றனர். இதையடுத்து தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து மனு செய்யப்பட்டுள்ளது.


Tags : Mayor , மேயர் பதவி, ஐகோர்ட் கிளை
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!