அரசு உத்தரவின்படி புதிய சொத்துவரி வசூலிப்பது நிறுத்தம்: மாநகராட்சி அதிகாரி தகவல்

சென்னை: அரசு உத்தரவின்படி புதிய சொத்துவரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பல ஆண்டுகளாக சொத்துவரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், புதிய சொத்து வரி, தாங்கள் செலுத்தி வரும் பழைய சொத்துவரியை விட அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் முறையாக கணக்கீடு செய்யாமல் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட சொத்துவரியை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர்.

தொடர்ந்து, சொத்துவரி தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண சென்னை மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் 23 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சொத்துவரி உயர்வு தொடர்பாக மறு ஆய்வு செய்ய குழு 4 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் புதிய சொத்துவரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் தங்களின் பழைய சொத்துவரியை செலுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சொத்துவரி உயர்த்துவதற்கு முன்பாக பழைய கணக்கீட்டின் படி  உள்ள பாக்கியை வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டிற்கான முதல் அரையாண்டில் சென்னை மாநகராட்சி ரூ.602 கோடி சொத்துவரி வசூல் செய்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் ரூ.1350 கோடி சொத்துவரி வசூலிக்க சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

Related Stories:

>