அதிமுக தோல்வி பயத்தாலேயே உள்ளாட்சிகளில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் வேல்முருகன் பேட்டி

சென்னை: அதிமுக அரசு தோல்வியின் பயத்தாலேயே உள்ளாட்சிகளில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலை கொண்டு வந்துள்ளது என்று வேல்முருகன் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மக்கள் வாக்களித்தால் நாம் வெற்றி பெற முடியாது. மக்கள் விரோத ஆட்சி படுதோல்வி அடையும் என்று கருத்தில் கொண்டு கவுன்சிலர்களை வைத்து மேயரை தேர்ந்தெடுக்கும் முறையை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது அதிமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது.

ஈழத்தில் 1.5 லட்சம் மக்களை படுகொலை செய்த போர் குற்றவாளி ஒருவரை இந்தியா அழைப்பதும், அவருக்கு தொடர்ந்து சிவப்பு கம்பளம் விரிக்கும் மோடி அரசுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தரக்குறைவான  வார்த்தைகளால் நடிகை காயத்ரி ரகுராம் பேசி வருவது மிக வன்மையான, எந்தவித  நாகரீக பண்பாடு இல்லாமல் விமர்சிப்பதும் அதற்கு பாஜ தலைவர்கள்  ஆதரவளிப்பதும் மிகவும் கண்டனத்திற்குரியது. கீழடி அகழ்வாராய்ச்சி தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு, தொன்மை ஆகியவற்றை காட்டுகிறது. மத்திய அரசின் எதிர்பார்ப்பு இல்லாமல் மாநில அரசே பெரும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி என்றால் இவர்கள், ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த நேரடி தேர்தலை மாற்றியிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு நடப்பதோ பாஜ கண்ணசைவில் நடக்கும் பினாமி ஆட்சி. அவர்கள் சொல்வதைதான் அதிமுக அரசு கேட்டு செயல்படுகிறது. ஏற்கனவே சட்டமன்றத்தில் சென்னை மாநகரத்திற்குள் பஞ்சமி நிலம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியால் பெரும் போராட்டம் நடத்தி ஜெயலலிதாவின் பையனூர் பங்களா பஞ்சமி நிலம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை பற்றி பேச, வாய் திறக்க பாமக போன்றவர்கள் ஏன் மறுக்கிறார்கள்.

தமிழ் சமூகத்தின் எதிராக மத்திய அரசு கொடுக்கும் பல்வேறு பிரச்னைகளை திசை திருப்ப இதுபோன்ற வீண் வதந்திகளை கூறிவருகிறார்கள்.

ரஜினி-கமல் திரையில் நடித்து பல நாளாகி விட்டது, அதனால் அரசியல் களத்தில் நடிக்கலாம் என்று வருகிறார்கள். கமல், ரஜினி கூறியது போல எந்த ஒரு வெற்றிடமும் தமிழகத்தில் இல்லை. உள்ளாட்சி தேர்தல் உண்மையில் நடைபெற்றால் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி செயல்படும். ஆனால் தேர்தல் நடப்பது சந்தேகம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: