6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஷூ வழங்க 66.71 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காலணிகள்(செருப்பு) அடுத்த ஆண்டு முதல் ஷூ மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ்களாக வழங்கப்பட உள்ளன. இதற்கான நிதியை ஒதுக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது  குறித்து அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது. தமிழகத்தில் கடந்த 2018-2019ம் கல்வி ஆண்டில்  அரசுப் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 29 லட்சத்து 14 ஆயிரம் மாணவ மாணவியருக்கு இலவச காலணிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2020-2021 ம் கல்வி ஆண்டில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு காலணிகளுக்கு பதிலாக ஷூ மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் வழங்கலாம். அதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.8 கோடியே 82 லட்சத்து 32 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல தொடக்க கல்வித்துறை இயக்குநர் தனது கடிதத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஷூ மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் வழங்கலாம் என்றும் அதற்காக ரூ.2கோடியே 8 லட்சத்து 4ஆயிரம் கூடுதல் செலவினம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட இரு இயக்குநர்களின் கருத்துருக்கள் அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு 2020-2021ம் ஆண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு இலவச ஷூ மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் வழங்க ரூ.53 கோடியே85 லட்சத்து 96 ஆயிரத்து 631, தொடக்க கல்வித்துறை இயக்ககத்துக்கு ரூ.12 கோடி 85 லட்சத்து 95 ஆயிரத்து 685 செலவில் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணையிடுகிறது.  இவ்வாறு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தனது அரசாணையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: