வயநாட்டில் பாம்பு கடித்து இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்: பினராயி விஜயனுக்கு ராகுல் காந்தி கடிதம்

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் வகுப்பறையில் இருந்த 5ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு  மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே புத்தன்குந்நு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஸீஸ். இவரது மகள் ஷஹ்லா ஷெரின் (10). அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5ம்  வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வகுப்பறையில் அமர்ந்து இருந்தார். அப்போது சுவரோடு  சேர்ந்துள்ள ஒரு ஓட்டையில் இருந்த பாம்பு மாணவியின் காலில் கடித்துள்ளது.  இதை ஷஹ்லா ஷெரின் கவனிக்கவில்லை. சிறிதுநேரம் கழித்து காலில் இருந்து ரத்தம் வருவதை கவனித்தார். உடனே ஆசிரியரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்டு பதற்றம் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஷஹ்லா ஷெரினை மீட்டு பத்தேரியில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்து டாக்டர்களுக்கு தெரியவில்லை. இதையடுத்து சிறுமியை பத்தேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தனர். ஆனால் பாம்பு கடித்ததை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சிறிது நேரத்தில் ஷஹ்லா ஷெரின் வாந்தி எடுக்க தொடங்கினார். இதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறினர். உடனே மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தொடங்கினர்.

சிறிது தூரம் செல்லும் வழியில் மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சேலோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மாணவியை பாம்பு கடித்துள்ளதை டாக்டர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து பாம்பு கடிக்கான சிகிச்சையை தொடங்க டாக்டர்கள் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பே மாணவி ஷஹ்லா ஷெரின் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பாம்பு கடித்து இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்; பாம்பு கடித்து உயிரிழந்த 10 வயது சிறுமியின் குடும்பத்துக்கு தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: