×

கொரட்டூரில் குண்டும், குழியுமான சாலையால் மக்கள் கடும் அவதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 84வது வார்டான கொரட்டூரில் விநாயகர் கோயில் தெரு, பேச்சியம்மன் கோயில் தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு ஆகிய தெருக்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொரட்டூர் பகுதியிலுள்ள சாலைகள் அனைத்தும் 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டவை. தற்போது அனைத்தும் சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், நடமாட முடியவில்லை.

சிறுமழை பெய்தாலும் சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன. பள்ளங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுகின்றனர். பள்ளிக்கும், டியூசனுக்கும் சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பும் மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர தேவைக்கு நோயாளிகளை ஏற்றி செல்ல ஆட்டோக்களும் வர மறுக்கின்றன. அப்படியே வந்தால் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளும் மிகவும் சிரமப்பட்டே வரவேண்டிய அவல நிலை உள்ளது.

இதனால் பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்களும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுகுறித்து அம்பத்தூர் மண்டல நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அனுப்பியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Korattur ,dirt road , Coruttur, road, people are very heavy
× RELATED ஒரே நாளில் பைக், செல்போன் பறித்த ரவுடி, வழிப்பறி கொள்ளையன் கைது