கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும்: வழக்குகளால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது: ஸ்டாலின் ட்விட்

சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அணுமின் நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் உத்தரவின்படி, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 9,000 பேர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள் இன்றும் நீதிமன்றத்திற்கு தினமும் அலையவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தேசத்துரோக வழக்கினால் இங்குள்ளவர்களின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் வாங்கி வைத்துள்ளனர். அந்தப்பகுதிகளில் பெரும்பாலானோர் மீனவர்களாவர்.

அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் உள்ளதால் தொழிலுக்குச் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவிக்கின்றனர். இதனால் இளைஞர்களுக்கு நல்ல வேலையேதும் கிடைக்காமலும், அரசு வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அமைதியான முறையில் கூடங்குளத்தில் போராடியவர்களுக்கு எதிராக அரசியல் ரீதியாக போடப்பட்ட வழக்குகளை அரசாங்கம் இன்னும் ரத்து செய்யவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

நிலுவையில் உள்ள வழக்குகள் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளன. இந்த வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: