×

குமரியில் தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் இலைகள் ஆங்காங்கே கருமை நிறமாக மாறி காணப்படுகிறது. இந்த அறிகுறிகள் தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் ஏற்படுகிறது. இந்த பூச்சிகள் இலைகளின் அடியில் சுருள் வடிவ முட்டைகளை இடும். அளவில் சிறிதான இந்த வெள்ளை ஈக்கள் மற்றும் அதன் குஞ்சுகள் தென்னை இலைகளின் அடிப்பகுதியில் கூட்டம் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த பூச்சிகள் மஞ்சள் வண்ணத்தினை நோக்கி கவரப்படும் தன்மை உடையது. ஆகவே மஞ்சள்நிற பாலித்தீன் தாள்களில் கிரிஸ் அல்லது ஆ மணக்கு எண்ணெய் தடவி 6 அடி உயரத்தில் தென்னந்தோப்புகளில் ஏக்கருக்கு 5 எண்கள் வீதம் கட்டினால் பூச்சிகள் கவரப்பட்டு அழிந்துவிடும். விளக்குப் பொறிகளை மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளுடன் பயன்படுத்தும் போது அதிக அளவில் இந்த பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

இலைகளின் அடிப்பரப்பில் விசைத் தெளிப்பான் மூலம் தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீய்ச்சி அடித்தும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இயற்கை எதிரிப்பூச்சிகளான பொறிவண்டுகள், பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகள், ஒட்டுண்ணிகள் ஆகியவை இந்த சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கூடியவை. என்கார்சியா ஒட்டுண்ணிகள் கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் அறிவியல்மையம் முயற்சியால் பெறப்பட்டு விவசாயிகளின் தோப்புகளில் விடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் விழா கிருஷ்ணபுரத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சத்திய ஜோஸ் மற்றும் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் திருக்குமரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) மனோரஞ்சிதம், திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மைய பேராசிரியை கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இராஜாக்கமங்கலம் மற்றும் ஈத்தாமொழி தென்னை உற்பத்தியாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டு ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்றுச்சென்றனர்.

Tags : Kumari , Kumari, coconut, white flies
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து