சேதுபாவாசத்திரம் அருகே புதுப்பெண் தீக்குளித்து சாவு; கணவன் வீடு சூறை: வாசலில் தான் அடக்கம் செய்வோம் என பொக்லைன் மூலம் குழி தோண்டியதால் பதற்றம்

சேதுபாவாசத்திரம்: ேசதுபாவாசத்திரம் அருகே புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாப்பிளை வீட்டை அடித்து உடைத்தனர். வாசலில்தான் உடலை அடக்க வேண்டும் என பொக்லைன் மூலம் குழிதோண்டியதால் பதற்றம் ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள முடச்சிக்காட்டை சேர்ந்தவர் வீராச்சாமி மகன் நவீன்குமார் (30). வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (27). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களாகிறது. திருமணம் நடந்த நாள் முதல் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 18ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த புவனேஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார்.

தகவல் அறிந்ததும் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சுமார் 100 பேர் பொக்லைன் இயந்திரத்தையுடன் வந்து, ‘‘மாப்பிள்ளையின் கொடுமை காரணமாகத்தான் ராஜேஸ்வரி தீக்குளித்து செத்தார்’’ என ஆவேசமடைந்தனர். அப்போது, பெண் வீட்டார் சிலர் நவீன்குமார் வீட்டை அடித்து உடைத்தனர். கண்ணாடி ஜன்னல்கள், தட்டுமுட்டு சாமான்களை துவசம்சம் செய்தனர். இதனால் மாப்பிள்ளை வீட்டார் வீட்டை  பூட்டிக்கொண்டனர். இந்நிலையில், நவீன்குமாருக்கு ஆதரவாக முடச்சிகாட்டை சேர்ந்த மக்களும் திரண்டனர். இதனால் இரு ஊர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானதால், போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். பேராவூரணி, சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாதுரை ஆகியோர் வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

நவீன்குமார் கொடுமையால் ராஜேஸ்வரி இறந்ததால், சடலத்தை நவீன்குமார் வீட்டு வாசலில் தான் புதைக்க வேண்டும் என வீட்டு முன் பொக்லைன் மூலம் குழிதோண்டினர். இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் பெண் வீட்டார் குழி தோண்டி தயார் நிலையில் இருந்தனர். வீட்டு வாசல் முன் புதைக்கும் பழக்கம் இங்கு கிடையாது. எனவே நவீன்குமாருக்கு சொந்தமான இடத்தில் புதைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் கூறி, பெண் வீட்டாரை சமாதானம் செய்தனர். பின்னர் நேற்று மாலை நவீன்குமார் தோட்டத்தில் ராஜேஸ்வரி உடல் புதைக்கப்பட்டது. அப்போது கணவரை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அதன் பிறகு பெண் வீட்டார் ஆவேசம் தணிந்து சொந்த ஊர்களுக்கு கிளம்பினர்.திருமணமான 4 மாதங்களில் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால், அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா, அல்லது வேறு காரணம் உள்ளதா என ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பேராவூரணி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: