வேலூர் பழைய பஸ்நிலையத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் விற்பனை படுஜோர்: குடிமகன்கள் குடித்துவிட்டு சாலைகளில் வீச்சு

வேலூர்: வேலூர் பழைய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்பளர் விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. இதனால் குடிமகன்கள் குடித்துவிட்டு சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 1ம்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. குறிப்பாக பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள், பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட் உட்பட 10க்கும் மேற்பட்ட பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் இதை கண்காணிக்க ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள அதிகாரிகள் தங்களின் கீழ் உள்ள எல்லைகளுக்கு உட்பட்ட கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு அபராதமும், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இன்னும் ஒரு மாதம் கடந்தால் அரசு உத்தரவு அமலுக்கு வந்து ஓராண்டு ஆகிறது. ஆனால் இன்னும் முழுமையாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடியவில்லை. இந்நிலையில் வேலூர் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்ளர், கவர்கள் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் வெளியே உள்ள குடிமகன்கள் மதுவை குடித்துவிட்டு டம்மளர்களை வெளியே வீசிவிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வேலூர் பழைய பஸ் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதன் அருகில் டாஸ்மாக் கடைகள் உள்ளது. குடிமகன்கள் மதுவை வாங்கி அங்கேயே பிளாஸ்டிக் டம்மளர்களில் ஊற்றி குடித்துவிட்டு சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர். தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிகளவில் இங்கு புழக்கத்தில் உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத வகையில் டம்மளர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் சிதறி கிடக்கிறது. அதிகாரிகள் பெயரளவில் மட்டும் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். ஒரே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகளின் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தடை இருந்தும் சில பார்களில் சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்கவும் கடுமையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: