புதுச்சத்திரம்-திருநின்றவூர் இடையே தரைப்பாலத்தில் தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி: விபத்தில் சிக்கும் அபாயம்

திருவள்ளூர்: புதுச்சத்திரம்-திருநின்றவூர் இடையே தரைப்பாலத்தில், தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் கிராமம் உள்ளது. இங்கிருந்து, திருநின்றவூர், பெரியபாளையத்தை இணைக்கும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே, 1968ம் ஆண்டு தரைப்பாலம் 250 மீட்டர் நீளம், 5.5 அடி அகலத்தில் கட்டப்பட்டது. கன மழையால், கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில், கடந்த 2015, டிசம்பர் 18ம் தேதி தரைப்பாலத்தின் இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சேதமானது. ஒரு இடத்தில், 20 மீட்டர் நீளத்திற்கும், மற்றொரு இடத்தில், 70 மீட்டர் நீளத்திற்கும் பாலம் உடைந்தது. இதனால், 29 நாட்களாக பாலத்தில் போக்குவரத்து தடைபட்டது. அதன்பின்னர், தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில், 13 வீராணம் திட்ட குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, நடுவில் மணல் மூட்டைகளை அடுக்கி, கிராவல் மண் கொட்டி, பாலத்தை தற்காலிகமாக ரூ.90 லட்சம் செலவில் சீரமைத்தனர். அதன்பின்னர் லேசாக பெய்த மழைக்கே தரைப்பாலம் கரைந்தது. மீண்டும் நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிகமாக சீர் செய்தனர்.

மேலும், நெடுஞ்சாலை குறுகலாக உள்ளதால், பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் இன்றி உள்ளது. இதனால், இரவில் கனரக வாகனங்கள் செல்லும்போது, எதிரே வரும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆற்றுக்குள் விழுந்து விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. பல வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் ஆற்றுக்குள் விழுந்து காயங்களுடன் வீடுகளுக்கு செல்லும் அவல நிலையும் உள்ளது. எனவே, இங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: