×

வீணாக கடலுக்குச் செல்லும் அவலம் சாத்தான்குளம், உடன்குடிக்கு வெள்ளநீர் திருப்பி விடப்படுமா?

உடன்குடி :  தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு கடலுக்கு செல்லும் வெள்ளநீரை வறட்சி பகுதியான சாத்தான்குளம், உடன்குடி பகுதிக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்தில் செழிப்புடன் இருந்த உடன்குடி, சாத்தான்குளம், பரமன்குறிச்சி, படுக்கப்பத்து, தட்டார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரின்றி விவசாயம் அழிந்து வருகிறது. மழை பொய்த்து நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்று உப்பு தன்மையாக மாறியுள்ளது. வேலை வாய்ப்பு குறைந்ததால் ஏராளமானோர் ஊரைக் காலி செய்து வெளியிடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.

இதன் காரணமாக பனை, தென்னை, முருங்கை, நெல் உள்ளிட்ட அனைத்து விவசாயங்களும் படிப்படியாக அழிந்தன. விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறின. இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட மத்திய நீர்ஆதார வளத்துறையினரும் உடன்குடி பகுதியை கருமைப்பகுதியாக அறிவித்தனர். உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் ஏராளமானோர் ஊரைக் காலி செய்து சென்றதற்கு சாட்சியாக இன்றளவும் அவர்களின் போக்குவரத்துக்கு வசதியாக இந்த பகுதிகளில் இருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் வருண பகவானின் கருணை பார்வையால் ஓரளவு மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் பெருகியுள்ளது. இதனால் மீண்டும் சில இடங்களில் விவசாய பணிகளை மக்கள் துவக்கி உள்ளனர். ஆனாலும் குடிப்பதற்கு விலைக்குத்தான் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்தாண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக இந்த பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. உடன்குடி பகுதியில் மழைப்பொழிவு, வழக்கம்போல் குறைவு என்பதால் குளங்கள், குட்டைகளில் குறைந்தளவு தண்ணீரே கிடக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளநீர் மூலம் சில குளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இருப்பினும் தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டிய மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகிறது. ஆனாலும் உடன்குடி, சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரும் சடையநேரி கால்வாயில் குறைந்தளவே தண்ணீரே வருகிறது. சடையநேரி கால்வாயில் மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்பிரமணியபுரத்தில் சடையநேரிகுளத்திற்கு தண்ணீர் செல்ல இரு ஷட்டர்களும், புத்தன்தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்ல 4 ஷட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கால்வாயில் குறைந்தளவே தண்ணீர் வரும் நிலையில், கடலுக்கு அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வெள்ள நீரை சடையநேரி கால்வாயில் திருப்பி விட்டால் உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் உள்ள குளங்கள் நிறைந்து நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும். விவசாய பணிகளும் மீண்டும் செழிக்கும். எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுத்து தாமிரபரணியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை உடன்குடி, சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் சடையநேரி கால்வாயில் திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : sea ,wasteland ,No Stopping ,Sathankulam ,Udangudi , Udangudi ,Sathankulam,Flood Water,Sea
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்