×

ம.நீ.ம. தலைவர் கமலுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை: நாளை முதல் 1 மாதம் ஓய்வு எடுக்க முடிவு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து  வருகிறார். இதன் படப்பிடிப்பு ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் திரையுலகிற்கு வந்து 60-ம் ஆண்டு கொண்டாட்டம் ஆகியவற்றையும் முடித்துள்ளார். இந்தப் பணிகளுக்கு இடையே மக்கள் நீதி மய்யத்தின் கட்சிப் பணிகளையும் கவனித்து வருகிறார். இந்நிலையில் நாளை கமலுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் பின்னர் சென்னை திரும்பினார். படப்பிடிப்பை தொடர்வதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு மாடிப்படியிலிருந்து இறங்கி வரும்போது தவறி விழுந்தார். இதில் அவரது வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில ஸ்டீல் பிளேட் பொருத்தினர். அதன்பிறகு 6 மாதம் ஓய்வில் இருந்தார். பின்னர் வழக்கமான பணிகளை கவனிக்கத் தொடங்கினார்.

முழுமையாக குணம் அடைந்த நிலையில் காலில் பொருத்தப்பட்ட பிளேட்டை நீக்க வேண்டும் என டாக்டர்கள் கூறி வந்தனர். படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகளில் மும்முரமாக இருந்ததால் அதற்கான அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டு வந்தார். தற்போது டாக்டர்களின் அறிவுரையை ஏற்று நாளை அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார் கமல். அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கமலுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து ஏற்கனவே பொருத்திய ஸ்டீல் பிளோடை நீக்குகின்றனர். அதன்பிறகு ஒரு மாதம்  ஓய்வில் இருக்க முடிவு செய்திருக்கிறார்.

Tags : Kamal: Decision , Kamal, Surgeon
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...