புதிய உச்சத்தை எட்டியது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு: உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தில் முகேஷ் அம்பானி

டெல்லி: உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடத்தை பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களில் சந்தையின் மதிப்பு 10 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில், அதன் தலைவர் முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தை பிடித்துள்ளார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களில் பங்கு மதிப்பு நேற்று புதிய உச்சத்தை எட்டியது. இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இதனால், முகேஷ் அம்பானியின் சோத்து மதிப்பு சுமார் 4 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 லட்சம் கோடியை நெருங்கியதால் புளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆர்.ஐ.எல். அதிபர் முகேஷ் அம்பானி 12-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

அதே நேரம், இந்திய பணக்காரர்களில் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் அசிம் பிரேம்ஜியும் (1,910 கோடி டாலர்), மூன்றாவது இடத்தில் ஷிவ் நாடாரும் (1,560 கோடி டாலர்) உள்ளனர். உதய் கோட்டக் மற்றும் லட்சுமி மிட்டல் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் இருக்கின்றனர்.

புளூம்பெர்க் பட்டியலில் 11,000 கோடி டாலர் நிகர சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் (10,900 கோடி டாலர்) இரண்டாவது இடத்திலும், பெர்னார்டு அர்னால்ட் (10,100 கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். வாரென் பபெட் (4), மார்க் ஜூகர்பெர்க் (5) ஆகியோரின் சொத்து மதிப்பு முறையே 8,640 கோடி டாலர் மற்றும் 7,410 கோடி டாலராக உள்ளது.

Related Stories: