வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் புவியரசன் பேட்டி

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்து. குறிப்பாக ராமநாதபுரம், தூத்தக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், தமிழகம், புதுவையின் கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், நாகை மாவட்டம் சிர்காழி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 6 செ.மீ மழையும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான பிரத்யேக எச்சரிக்கை ஏதும் இல்லை, என்று கூறியுள்ளார்.

Related Stories: