லாவோஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் தாய்லாந்து நாட்டு எல்லை பகுதியில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு

லாவோஸ்: லாவோஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் தாய்லாந்து நாட்டு எல்லை அருகே இன்று காலை 6.50 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள சையன்புலி நகரின் வடமேற்கு திசையில்  53 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஆனால் இந்நிலநடுக்கம் 700 கி.மீ. தொலைவில் உள்ள தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் வரை உணரப்பட்டு உள்ளது. போப் பிரான்சிஸ் அந்நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். தாய்லாந்து நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள், பாங்காக் மற்றும் புறநகர் பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளது. இதேபோன்று வியட்னாம் நாட்டின் தலைநகர் ஹனோய் பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.  

மேற்கூரையில் உள்ள விளக்குகள் கடுமையாக குலுங்கின.  இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.  பல அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் 24வது தளம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன் 5.7 அளவிலான நிலநடுக்கம் லாவோசில் ஏற்பட்டு உள்ளது. போப் பிரான்சிஸ் நேற்று பாங்காக் நகருக்கு வந்தடைந்து உள்ளார்.  அவர் இன்று நடைபெறும் கூட்டமொன்றில் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.  இதன்பின் அந்நாட்டு அரசரையும் சந்திக்கிறார்.  பின்னர் இன்று மாலை கூட்டம் ஒன்றையும் நடத்துகிறார்.  அவர் இந்நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளாரா? என்று கேட்கப்பட்டதற்கு அவருடன் வந்த குழுவினர் எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Stories: