இனி வீட்டில் இருந்தே முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் தபாலில் ஓட்டு போடலாம்!

நன்றி குங்குமம்

ஜார்க்கண்ட் தேர்தலில் புதிய அணுகுமுறை

இந்திய தேர்தல்களில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950ன்படி மாநிலத்தின் தலைவர் மற்றும் ஆயுதப் படையில் பணியாற்று வோர் தபால் முறையில் வாக்களிக்கலாம். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் தபால் முறையில் வாக்களிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், பிழைப்புக்காக அல்லது வேறு காரணங்களுக்காக வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் சாதாரண வாக்காளர்கள் தபால் முறையில் வாக்களிக்க முடியாது. அதேநேரம் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அவர்களுக்கான வாக்குரிமை இருக்கும் இடத்தில் அல்லாமல், வேறு இடத்தில் தேர்தல் பணிக்கு அமர்த்தப்பட்டால் அவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம். அல்லது அவர் வாக்களிக்கும் பகுதியிலேயே தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட்டால், தேர்தல் பணிக்கான சான்றிதழைப்பெறலாம். இதேபோல, அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்களும், தபால் முறையில் வாக்களிக்கலாம் அல்லது தேர்தல் பணிக்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

போலீசார் உட்பட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பணி வாகனங்களுக்கான டிரைவர், கண்டக்டர், க்ளீனர் மற்றும் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்பவர்கள், அவரவர் வாக்குரிமை இருக்கும் பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர். அதனால், அவர்கள் தேர்தல் பணியமர்த்தப்பட்டதற்கான சான்றிதழ் முறையிலேயே வாக்களிக்கலாம். இன்றுவரை மேற்கண்ட முறைதான் தபால் வாக்கில் பின்பற்றப்படுகிறது. மற்றவர்கள் எல்லாம், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்குச் சென்று, வரிசையில் நின்று வாக்களித்தே ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியும்.தபால் வாக்கு அளிக்க தகுதி உடையவர், முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டுச் சீட்டில் தங்களுக்குப் பிடித்த சின்னத்துக்கு அருகில் ‘டிக்’ அடிக்க வேண்டும். அந்த ‘டிக்’கானது, பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படக்கூடாது, ‘டிக்’ அடித்த துண்டுச் சீட்டை ‘ஏ’ என்ற இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரில் வைத்து ஒட்டவேண்டும்.

‘ஸ்டேபிள்’ பண்ணக்கூடாது. 13ஏ என்று ஒரு படிவத்தை பூர்த்தி செய்து, சான்றொப்பமிட தகுதி உடையவரிடம் சான்றொப்பம் வாங்க வேண்டும். பின்னர் ‘ஏ’ என்று ஒட்டிய இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரையும், 13ஏ படிவத்தையும் சேர்த்து ‘பி’ என்ற கவரில் போட்டு ஒட்டவேண்டும். அந்த தபாலை, அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதிமுறை. இத்தனை நடைமுறைகளை பின்பற்றுவதால், தபால் வாக்கு அளிக்க தகுதி உடையவர்களே செல்லாத வாக்கு அளிக்கும் நிலையும் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்போது தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ‘‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கஉள்ளது. நவம்பர் 30ல் தொடங்கி டிசம்பர் 20ல் முடிந்து, டிசம்பர் 23ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

நாட்டிலேயே முதல் முறையாக ஜார்க்கண்ட் தேர்தலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்கும் முறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...’’ என்றார்.தேர்தல் ஆணையத்தின் புதிய அணுகுமுறையால், வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் முதியோர், மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும். இருந்தாலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 30 சதவீதம் பேர் வரை வயதானோர், மாற்றுத்திறனாளர் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தனை வாக்காளர்களும் எப்படி தபால் வாக்குகளை அளிக்க உள்ளனர். அந்த வாக்குகள் வாக்காளரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் பாதுகாப்பானதாக இருக்குமா... தேர்தல் ஆணையம் எந்த முறையில் இத்திட்டத்தை செயல்படுத்தப் போகிறது... என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   

தொகுப்பு: செ.அமிர்தலிங்கம்

Related Stories: