×

இந்தியாவில் குழந்தைகளுக்கான படங்களே இன்னும் எடுக்கப்படவில்லை!

நன்றி குங்குமம் முத்தாரம்

பெரும்பாலான மனிதர்கள் சிறு அவ மானம் ஏற்பட்டாலே அதை நினைத்து நிலைகுலைந்து போகின்றனர். சிலர்  தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.  ஆனால், பல்வேறு அவமானங்களுக்கு மத்தியில் நிலைகுலையாமல் எவ்வாறு ஒரு பெண் துணிச்சலுடன் தன்னு டைய கனவை நோக்கி நகர்ந்தாள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார் ஜூஹி சர்மா.  பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட ஜூஹி பிறந்தது, வளர்ந்தது, படித்ததெல்லாம் சென்னையில்தான். அவருக்கு  அமெரிக்காவின் புகழ்பெற்ற ப்ரூக்லின் இன்ஸ்டிடியூட்டில் டைரக்‌ஷன் கோர்ஸ் படிப்பதற்கான இடம் கிடைத்தது. கல்விச் செலவுக்காக ஆன்லைனில் கிரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டினார். அப்போது யாரென்றே தெரியாத சமூக வலைத்தள ஆசாமிகளால் ‘‘இப்படி பிச்சை எடுப்பதற்கு பதிலாக விபச்சாரம் செய்யலாமே’’ போன்ற அருவருப்பான வசைகளுக்கு உள்ளானார். ஆனால், இதையெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை. தனது கனவை நோக்கிய பயணத்தில் மட்டுமே குறியாக இருந்து அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்.

‘‘ஆரம்பத்தில் இந்த நிகழ்வால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இது ஒரு மோச மான, பயமுறுத்தும் அனுபவமாக இருந்துச்சு. நண்பர்கள் ஆறுதலாக இருந்து உற்சாகப்படுத்தினாங்க. என்னிடம் அசிங்கமா நடந்து கொண்டவர்களுக்கு எந்த பதிலும் சொல்ல விரும்பலை. அதை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது மட்டுமே அதிலிருந்து விடுபட ஒரே வழி என்பதை உணர்ந்து கொண்டேன்’’ - அழகாக தமிழில் பேசுகிறார் ஜூஹி. ஒளிப்பதிவாளர், வருங்காலத் திரைப்பட இயக்குனர். ‘‘ஒரு பெண்ணை, ஆண் துரத்திப் போவது மட்டும்தான் காலம் காலமாக நம்முடைய பெரும்பாலான படங்களின் கதையாக இருக்கிறது. நம் சமூகத்தில் வளர்கின்ற குழந்தைகள் இந்தப் படங்களை மட்டும்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்தியாவில் குழந்தைகளுக்கான தரமான படங்களே இன்னும் எடுக்கப்படவில்லை.  அதனால் குழந்தைகளுக்கான நல்ல தரமான, யதார்த்தமான படத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பெருங்கனவு. திரைப்படம் எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது இல்லை.

எழுத்தில் வடிக்கப்பட்ட கதையை காட்சிகளின் வழியாக திரையில் சொல்ல வேண்டும். அதற்கு படம் இயக்குவதைப் பற்றி கற்க வேண்டும். அதனால் தான் ப்ரூக்லினில் டைரக்‌ஷன் படிக்க விண்ணப்பித்திருந்தேன். என்னிடமிருக்கும் திறமையை மதித்துதான் அங்கே படிப்பதற்கான அட்மிஷனை கொடுத்தார்கள். இந்த அரிய வாய்ப்புக்காக எவ்வளவு நாள் நான் காத்திருந்தேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். அமெரிக்கா போய் படிக்க வேண்டுமென்றால் நிறைய பணம் தேவைப்படும். அந்த அளவுக்கு பணம் என்னிடம் இல்லை. அம்மா, அப்பாவிடம் கேட்டுப் பார்த்தேன். அவங்களும் ‘‘இப்ப முடியாது’’ எனச் சொல்ல, சரி பேங்க்ல லோன் கேட்டுப் பார்க்கலாம்னு  முடிவு செய்தேன். பல வங்கிகளை அணுகினேன். ‘‘சினிமா சார்ந்த படிப்புக்கெல்லாம் லோன் கிடையாது. எதை நம்பி நாங்க கடன் கொடுக்கறதுன்னு அவங்களும் கை விரிச்சிட்டாங்க. ஸ்காலர்ஷிப்பும் கிடைக்கல.

ஆனால், படிச்சே ஆகணும்ங்கிறதால வெறியா இருந்தேன். கிரவுட் ஃபண்டிங் மட்டும்தான் கையில் இருக்குற ஒரேயொரு வழி. கடைசி முயற்சியாதான் இதுல இறங்கினேன். இதுக்கு முன்னாடி நிறைய பேர் கிரவுட் ஃபண்டிங் மூலமா நிதி திரட்டி படிச்சதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். அது எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துச்சு. அதனால ஒரு வெப்சைட் வழியா கிரவுட் ஃபண்டிங் மூலமா நிதி  திரட்ட ஆரம்பிச்சேன். அந்த வெப்சைட்டோட லிங்க்கை எனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அனுப்பினேன். ஃபேஸ்புக், டுவிட்டர்ல போட்டேன்.அப்பதான் நான் எதிர்பார்க் காதது எல்லாம் நடந்துச்சு. யாருன்னே தெரியாதவங்க அசிங்கமா கமென்ட் பண்ணினாங்க. இப்ப அதிலிருந்து வெளியே வந்துட்டேன்...’’

த.சக்திவேல்


Tags : children ,India , India, baby, pictures, fetched
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...