அமிலப் பின்னோட்ட நோய் விழிப்புணர்வு வாரம் நவம்பர் 18-24

Gastroesophageal reflux disease (GERD) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 18 முதல் 24-ம் தேதி வரையிலான ஒரு வாரம் அமிலப்  பின்னோட்ட நோய் விழிப்புணர்வு வாரமாக(GERD Awareness Week) அனுசரிக்கப்படுகிறது.

இரைப்பையிலுள்ள சாறும், உணவுகளும் இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன. இரைப்பைச்சாற்றில் உள்ள அமிலத்தால் உணவுக் குழாயிலுள்ள சவ்வு பாதிக்கப்படுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்பட்டு Gastroesophageal reflux disease (GERD) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) தீவிரமடைகிறது. இது ஒரு நீண்டகால நோய்.

அதிகளவிலான நெஞ்செரிச்சல் இதனால் ஏற்படும் முக்கிய அறிகுறியாக உள்ளது. மேலும் உணவு விழுங்கும்போது வலி, அதிக உமிழ்நீர் சுரத்தல், குமட்டல், நெஞ்சுவலி, நீண்டகால இருமல், தொண்டை அழற்சி, மூச்சுத்தடை போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாக உள்ளது. இந்நோயின் அறிகுறிகள் தீவிரமடைந்த நிலையில் சிலருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இரைப்பையில் உள்ள அமிலமானது, உணவுக் குழாய்க்குள் செல்வதால் நெஞ்செரிச்சல் பிரச்னை உண்டாகிறது.

துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, சரியான நேரத்தில் சாப்பிடாதது, முறையான உணவுப் பழக்கமின்மை போன்றவற்றால் இந்த பிரச்னை உண்டாகிறது.

இந்த நோய் தீவிரமாகும்போது உணவுக்குழல் சுருங்கி, சாப்பிடுவதே சிரமமாகி விடுகிறது. மேலும் இந்நோய் உணவுக்குழலில் புற்றுநோய் உண்டாவதற்கும் காரணமாக இருக்கிறது. ECG பரிசோதனை, PH அளவுகளை கண்டறியும் பரிசோதனைகள் போன்றவற்றின் மூலம் இந்நோயின் நிலையைக் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தல், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் மூலம்  இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நோய் தீவிரமாகாமல் தடுக்கலாம்.

* உறங்கச் செல்லும்முன் அதிகளவில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

* உணவருந்திய பிறகு இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்ல வேண்டும்.   

* சாக்லெட், கொழுப்பு மற்றும் காரம் அதிகமுள்ள உணவு வகைகள், காஃபி போன்றவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

* உணவில் 50 சதவிகிதம் பச்சைக் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிடுவது நல்லது. அவரவர் தேவைக்கேற்ப தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.

* வயிற்றை இறுக்கும் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

* தினமும் நடைப்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சிகளை செய்வது செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

Related Stories: