ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகை ரூ.92 ஆயிரம் கோடி: செல்போன் சேவை நிறுவனத்திற்கு மத்திய அரசு 2 ஆண்டு அவகாசம்

டெல்லி: இந்தியாவில், செல்போன் சேவையை வழங்கும் நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த, மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளது. செல்போன் நிறுவனங்களுக்கு, AGR எனப்படும் சரிசெய்யப்படும் தோராய வருவாய் அடிப்படையில், லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் நிர்ணயம் செய்கிறது. புதிய தொலைத் தொடர்பு கொள்கைப்படி, டெலிபோன் நிறுவனங்கள் தங்களின் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயிலிருந்து (ஏஜிஆர்) ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு லைசன்ஸ் கட்டணமாக தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டும்.

Advertising
Advertising

மேலும், அந்நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றைகளை பயன்படுத்துவதற்கான கட்டணமும் செலுத்த வேண்டும். தொலைத் தொடர்பு வருவாய் சாராத வாடகை, சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் லாபம், ஈவுத்தொகை மற்றும் சொத்து வருமானம் ஆகியவை சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயாக கணக்கிடப்பட்டு, அதில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு லைசன்ஸ் கட்டணமாக மத்திய அரசுக்கு டெலிபோன் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என தொலைத் தொடர்பு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த கணக்கீட்டின்படி ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு இதுவரை லைசன்ஸ் கட்டணமாக 21,682.13 கோடி, வோடோபோன் நிறுவனம் 19,823.71 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 16,456.47 கோடி, பிஎஸ்என்எல் 2,098.72 கோடி, எம்டிஎன்எல் 2,537.48 கோடி செலுத்த வேண்டும். இவற்றின் மொத்த மதிப்பு 92 ஆயிரம் கோடி. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், டெலிபோன் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

டெலிபோன் நிறுவனங்களின் கோரிக்கைகளை எல்லாம் நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவைகள் செலுத்த வேண்டிய ஆண்டு லைசன்ஸ் கண்டணம் 92 ஆயிரம் கோடியை, மத்திய தொலைத் தொடர்பு துறை வசூலிக்க அனுமதி வழங்கியது. மேலும், தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய அபராதம் மற்றும் வட்டியையும் டெலிபோன் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள், மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தன. இதை பரிசீலித்த மத்திய அரசு, செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய, 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான ஸ்பெக்டரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளது.இதற்கான ஒப்புதல், கேபினட் கூட்டத்தில் வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

விருப்பப்பட்டால், செல்போன் நிறுவனங்கள், தவணை முறையிலும், தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தவும், மத்திய அரசு வாய்ப்பளித்திருக்கிறது. இருப்பினும், அடுத்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது, தற்போதுள்ள அலைக்கற்றை நிலுவைத் தொகைக்கான வட்டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு கூறியிருக்கிறது.

Related Stories: