மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அறிவிப்பாணைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு : மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுரை

மதுரை : மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அறிவிப்பாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அறிவிப்பாணையை ரத்து செய்யுமாறு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முறையீடு செய்தார். முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை

*தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் தேதி  எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன.

*இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன், தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

*இந்த அவசர சட்டத்தின்படி, மாநகராட்சி மேயர் பதவிகள், பேரூராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் தலைவர்கள் இனிமேல் மறைமுக தேர்தலால் தேர்வு செய்யப்படுவர்.

*அதாவது, மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளின் கவுன்சிலர்கள், தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுவர். பின்னர் மாநகராட்சி கவுன்சிலர்கள் மேயர்களையும், பேரூராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் அந்தந்த அமைப்புகளின் தலைவர்களையும் தேர்வு செய்வர். மேயர்கள், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர்கள் இனிமேல் மக்களால் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.

*மாநகராட்சி மேயர், பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள் இதுவரை மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும்போது, மன்றத்திலுள்ள பெரும்பாலான கவுன்சிலர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும், மேயர் மற்றும் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.

*இதனால் மேயர், கவுன்சிலர்கள்  இடையே ஒத்துழைப்பு ஏற்படுவதில் பிரச்னை காணப்பட்டது. தற்போது கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்யும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதால் இனி அவ்வாறு பிரச்னை இருக்காது என கூறப்படுகிறது.

*இந்த அவசர சட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு இந்த விஷயத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த நடைமுறை குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளனர்

மறைமுக தேர்தலுக்கு எதிராக வழக்கறிஞர் நீலமேகம் முறையீடு

இந்நிலையில், மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்வது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர் நீலமேகம் முறையிட்டார். தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கை அவசிய வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் நீலமேகம் கோரிக்கை விடுத்தார். அப்போது, அவரது முறையீடு தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்கான தேர்வு தொடர்பாக விதிக்கப்பட்ட தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து இன்று மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

Related Stories: