டெல்லி வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள விற்பனை வரி அலுவலக கட்டடத்தில் திடீர் தீவிபத்து!

புதுடெல்லி: டெல்லியில் வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மத்திய டெல்லியில் வருமான வரித்துறை அலுவலகமானது அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 13வது மாடியில் விற்பனை வரி அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 8.30 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி தீயணைப்பு நிலையத்தின் பிராந்திய தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர அட்வால் தலைமையிலான 5 தீயணைப்பு வீரர்கள், 8.55 மணியளவில் தியை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய டெல்லி தீயணைப்பு துறை இயக்குநர் விபின் கான்டல், 13வது மாடியில் உள்ள ஒரு சிறையில் தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. புகை வெளிவந்ததை அடுத்தே, தீவிபத்து ஏற்பட்டுள்ளது கண்டறிந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்ட அறையில், சில அலுவலக பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. தீவிபத்து ஏற்பட்டிருந்தபோது, அந்த அறையானது மூடப்பட்டிருந்தது, அலுவலகமும் திறக்கப்படவில்லை, என்று கூறியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து பேசிய தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர அட்வால், தீயைணப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் 10 நிமிடங்களில் அணைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், தீவிபத்து ஏற்பட்ட வளாகம் முழுவதும் புகைசூழ்ந்து காணப்படுகிறது.

Related Stories:

>