ரயில்வே வாரியம் அமைக்காவிட்டால் தாம்பரம் ரயில் நிலையத்தில் தொகுதி நிதியிலிருந்து மின்தூக்கி: டி.ஆர்.பாலு எம்பி உறுதி

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே வாரியம் மின் தூக்கி அமைக்காவிட்டால் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிறைவேற்றப்படும் என்று டி.ஆர்.பாலு எம்பி உறுதியளித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு தாம்பரம் ரயில் நிலைய பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை விண்ணப்பங்களை ஆராய்ந்து ரயில்வே ஆணையத்தின் தலைவர் வினோத்குமார் யாதவுக்கு கீழ்க்கண்ட கடிதத்தை எழுதியுள்ளார். தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. 60 விழுக்காட்டிற்கும் மேல் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி புறநகர் பகுதிகளுக்கு பயணம் செய்கிறார்கள். மாணவர்கள், மூத்த குடிமக்கள், நோயாளிகள் போன்றோர் நடைமேடை 5, 6, 7 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்த சிரமப்படுகின்றனர்.

எனவே நடைமேடை 5 மற்றும் 6க்கு பொதுவாக மின்தூக்கி படிக்கட்டுகள் ஒன்றும், நடைமேடை 7 மற்றும் 8க்கு பொதுவாக மின்தூக்கி படிக்கட்டுகள் ஒன்றும் அமைத்து தர ரயில்வே ஆணைய தலைவர் வினோத்குமார் யாதவ் அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி படிக்கட்டுகள் அமைக்கும் நிலையில் மாணவர்கள், மூத்த குடிமக்கள், நோயாளிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். ரயில்வே துறை இத்திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால் மின்தூக்கி படிக்கட்டுகளுக்கான உத்தேச செலவு ரயில்வே நிர்வாகம் தெரிவித்தவுடன் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு இந்த அவசியம் மற்றும் அவசர பணிகளை மேற்கொள்ள தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்த செலவையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

Related Stories: